யாழில் ஊடகவியாளருக்கு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை நடாத்தாத யாழ் பொலீசார்

308 0
ஊடகவியலாளர் மீதான அவதூறு மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்காத யாழ்ப்பாணம் பொலிசாரை மனித உரிமை ஆணைக்குழு முன்பாகத் தோன்றுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடகவியலாளர் நடராசா- லோகதயாளன் என்பர் தொடர்பில் ஐ.தே.கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என தன்னைக் கூறிக்கொள்ளும் காரைநகரைச் சேர்ந்த தியாகராஜா- துவாரகேஸ்வரன் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக தனது முகப்புத்தகத்தில் மேற்கொள்ளும் அவதூறுப் பரப்பலிற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் துவாரகேஸ்வரன் தொடர்ந்தும் அவதூறப் பரப்ப முயலும் நிலையில் பொலிசாருக்கு எதிராக யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் குறித்த செய்தியாளரினால் கடந்த 2017-03-01 யாழ்ப்பாணம் பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த்து. இதற்கமைய யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவினர் மார்ச் மாதம் 10ம் திகதிக்கு முன்பாக இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு ஆணைக்குழுவிற்கு அறிக்கை இடுமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு எழுத்தில் அறிவுறுத்தியிருந்தனர்.
அவ்வாறு ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கும் பொலிசார் செவிசாய்க்காத நிலையில் குறித்த முறைப்பாட்டு செய்தியாளரையும் மூன்று பொலிஸ் அதிகாரிகளும் எதிர் வரும் 23ம் திகதி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்பாக நேரில் ஆயராகுமாறு சகலருக்கும் பதிவுத் தபாலில் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவினால் பதிவுத் தபாலில் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிசார் அவசர அவசரமாக நேற்று முன்தினம்   பணியில் இறங்கி குறித்த விடயம் தொடர்பினில் விசாரணை மேற்கொள்ள இன்றைய தினம் பொலிஸ் நிலையம் வருமாறு செய்தியாளரை நேரில் சென்று அழைத்துள்ளனர்.