யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வாடகைப்பணம் செலுத்தாத ஈ பி டி பி கட்சியினர்

230 0
யாழ்ப்பாணம் ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இரு முக்கிய கடைக் கட்டிடங்களைப் பயன்படுத்திய வாடகைப்பணம் 11 லட்சம் ரூபாவினை ஈ.பீ.டீ.பியினர் இன்றுவரையில் சங்கத்திற்கு செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ப.நோ.கூ.சங்கத்தின் கட்டிடங்களான பஸ்தியான் சந்திப் பகுதியில் இயங்கிய மிகப்பெரும் கட்டிடமும் அதேபோன்று காங்கேசன்துறை வீதியில் உள்ள தலமைக் காரியாலயத்தின் கீழ் உள்ள ஓர் கடையினையும் வாடகை அடிப்படையில் ஈ.பீ.டீ.பியினர் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு பயன்படுத்திய கட்டிடங்களிற்கும் அரசியல் செல்வாக்கின் காரணமாக சந்தைப் பெறுமதியினை விடவும் பாதிப் பெறுமதியே வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக பஸ்தியான் சந்திப் பகுதியில் அமைந்திருந்த இரு பெரும் கடைகளுடன் கூடிய கட்டிடத் தொகுதிகளிற்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா மட்டுமே தீர்மானிக்கப்பட்ட போதிலும் அப்பணத்தைக்கூட ஈ.பீ.டீ.பியினர் பல ஆண்டுகளாக செலுத்தாது பயன் படுத்தியுள்ளமை தெரியவருகின்றது. இதன் அடிப்படையிலேயே இக் கட்சியினர் சங்கத்திற்கு 11 லட்சம் ரூபா பணம் செலுத்தவேண்டியுள்ளது.
குறிப்பாக இக் கட்டிடங்கள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்த்தன் பிற்பாடு இக் கட்சியின் செல்வாக்கில் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட தலைவரின் அனுசரணையுடன் வழங்கப்பட்டுள்ளது. இதேநேரம் இச் சங்கத்திற்குச் சொந்தமான மேலும் பல கட்டிடங்கள் வாடகை அடிப்படையில் பிறருக்கு வழங்கப்பட்டபோது சந்தையின் உண்மையான மெறுமதிக்கு வழங்கப்பட்டுள்ளதோடு முற்பணமும் பெறப்பட்டு வழங கப்பட்டுள்ளபோதிலும் குறித்த கட்சிக்கு மட்டும் எவ்வித முற்பணமும் இன்றி வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.
இவ் விடயமானது நேற்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தினில் இடம்பெற்ற கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டி இவ்வாறு இக் கட்சி பணம் செலுத்த வேண்டியுள்ளதா எனக்கோரியபோது அவ்வாற தொகை வருமதியில் உள்ளது. என சங்கத்தின் பிரதிநிதி ஏற்றுக்கொண்டார்.
இதேவேளை குறித்த கட்சியினரின் தலமை அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியட்டருக்கான மின்சாரக் கட்டனமும் கடந்த 1996ம் ஆண்டுமுதல் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.