கிளிநொச்சி பளையில் முறையற்ற வகையில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பகிர்ந்தளிப்பு

149 0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் முறையற்ற வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில்  முகமாலை  தோட்டம், கனகரஞ்சன் தோட்டம்,கிராஞ்சிகுளக்கரை காணி ஆகிய மூன்று  இடங்களில் 2010 க்கு பின்னர் 211 ஏக்கர் காணிகள் 53 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழு  தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் ஊடாக விபரங்கள் கோரிய ஊடகவியலாளருக்கு பதிலளித்துள்ளது.

ஆனால், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் யுத்தத்திற்கு முன்பிருந்து குறித்த காணிகளிலும் மற்றும் காணிகள் இன்றியும் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற சூழலில் அவர்களால் நீண்டகாலமாக குறித்த காணிகளை தமக்கும் வழங்குமாறும், காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு அமைவாக காணியை பயன்படுத்துவோம் என தெரிவித்தும்  அந்த மக்களுக்கு இதுவரை  காணிகள் வழங்கப்படவில்லை  பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல தடவைகள்  அந்த பிரதேச  மக்கள் பல போராட்டங்களை நடாத்தியிருந்தனர், அத்தோடு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என பல தரப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், குறித்த காணிகள் ஏற்கனவே பல ஏக்கர் காணிகளுக்குச் சொந்தகாரர்களாக உள்ளவர்களுக்கும், செல்வாக்குமிக்கவர்களுக்கும்  இரண்டு ஏக்கர், ஐந்து ஏக்கர்கள் என காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதுமாத்திரமன்றி  கணவன், மனைவி, தந்தை, மகன்,மருமகன் என குடும்பம் ஒரே குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பலருக்கு குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்பட்டுள்ளன.