திருகோணமலை வெருகல் பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

56 0
திருகோணமலை வெருகல் – நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெருகல் மக்கள் இன்று வியாழக்கிழமை (31) நாதனோடை பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வெருகல் – நாதனோடை பகுதியில் 1000 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்விடத்தில் மணல் அகழப்பட்டால் அது வெருகல் ஆற்றின் அணைக்கட்டை உடைக்கும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மக்களுடைய உடமைகள், வாழ்வாதாரம் என்பன பாதிக்கும் என்பதனால் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 28ம் திகதி மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, மண் அகழ்வு தற்காலிகமாக கைவிடப்பட்டதோடு அன்று இரவு 9.00 மணியளவில் மக்களை அச்சுறுத்தும் முகமாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவரான தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோர் ஈச்சிலம்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மறுநாள் 29 ஆம் திகதி மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.

அத்துடன், மேலும் சிலரை பொலிஸார் தேடிவருகின்றனர். இவ்வாறான நிலையில் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றவர்களை மறைமுகமாக அச்சுறுத்தி பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொலிஸார் கைது செய்வதாகவும், பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

வெருகல் கங்கையில் சேருகின்ற, நீரோட்டத்தை தடை செய்கின்ற மணலை அகழ்வதற்கு எந்தவித எதிர்ப்பையும் தாம் தெரிவிக்கவில்லை எனவும் அவற்றை முறையான கள ஆய்வுகளின் பின்னர் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.