
Berlin den 30 August 2023
“தமிழ்த்தேசிய அரசியலை முற்றாக அழிக்க முனையும் பெளத்த சிங்கள இனவெறியர்கள்”
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இல்லத்தின் முன்பாகத் திரண்ட பெளத்த சிங்கள இனவெறியர்களது முற்றுகைப் போராட்டச் செய்திகள் யாவரும் அறிந்ததே. ஆனால் இதன் பின்னணியில் ஒளிந்துகிடக்கும் பெளத்த சிங்கள இனவெறி அரசினது ‘தம்மதீபக் ‘கோட்பாட்டு அரசியல் நகர்வுகள் எளிதில்ப் புரிந்துகொள்ளமுடியாதவை. ஏறக்குறைய 21ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகள் உடனான சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுஇ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபொழுது இதே ரணில் விக்கிரமசிங்க அரசு, எமது மக்களின் அன்றாட மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மறுத்து எமக்கு அரணாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஒதுக்கி ஓரம்கட்டும் நடவடிக்கைகளை இரகசியமாக மேற்கொண்டது. அதுமட்டுமல்லாது சில உலகவல்லாதிக்க நாடுகளோடு இணைந்து எமது விடுதலை இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சி வலைகளைப்பின்னி, அதற்குள் சிக்கவைத்து அழித்தொழிப்பதற்கான சதித்திட்டங்களையும் இதே ரணில் விக்கிரமசிங்கவே செய்து முடித்தார். இன்று சிறிலங்காவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தன்னை ஒரு ஜனநாயகத்தின் பிதாமகனாக உலகிற்குக் காட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்குப் பெரும் தடையாகவும் அதேவேளை இவரது உண்மையான இனவாத முகத்தினை வெளி உலகத்திற்கு வெளிப்படுத்தும் ஒரே சக்தியாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அதன் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுமே தாயக அரசியல்ப் பரப்பில் விளங்கிவருகின்றனர்.
சிங்கள-பெளத்த மகாசங்கத்தினது ஆசிர்வாதத்தோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசு, ஒருபுறம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் அறிவிப்புகளை மேற்கொண்டு, சிறிலங்கா தொல்பொருள்த் திணைக்களத்தினூடாக தமிழர்களது தொன்மை வாய்ந்த இடங்களையும் நிலங்களையும் சிங்கள-பெளத்த குருமார்களுக்குத் தாரைவார்த்து வருகின்றது. மறுபுறமாக இதற்குக் கடும் எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதாகவும் நடிக்க முனைகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறுதியதும், தேர்தல் இன்றி ஜனாதிபதிப் பதவியினைக் கைப்பற்றும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க மிகத்தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இதன்போது தனக்கு ஆதரவு வழங்குமாறு அனைத்துக்கட்சித் தலைவர்களோடும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்க திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களையும் சந்தித்திருந்தார்.
அப்போது திரு. கஜேந்திரகுமார் அவர்கள் “உங்களுக்கு ஆதரவு வழங்குவது அல்லது வழங்காமல் விடுவது என்பதற்கப்பால், இலங்கைத்தீவில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் தேசிய இனப்பிரச்சினையில் தமிழர்களுக்காக நீங்கள் முன்வைக்கும் தீர்வினை முதலில் தெளிவுபடுத்துங்கள்” எனக்கேட்டபொழுது, 13ஆம் திருத்தச்சட்டத்தினை சிங்களமக்கள் தீவிரமாக எதிர்ப்பதாகவும் வேண்டுமானால் அதிகாரஙகள் எதுவுமற்ற இஒற்றையாட்சிக்கு உட்பட்டு மாகாணசபை பற்றிப் பேசிப்பார்கலாம் எனப் பதிலளித்தார். சிங்கள ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழர்களுக்கான எவ்விதமான தீர்வுக்கும் வழியில்லை என்பதனையும்இ தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு முழுமையான சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட தீர்வையே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளும் என்பதனை திரு. கஜேந்திரகுமார் அவர்கள் மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறியிருந்தார்.
1880 களில் அநகாரிக தர்மபால எனும் ஹேவவிதாரண தேரோவால் எழுச்சிபெற்ற பெளத்த சிங்கள இனவெறிக்கோட்பாடு 1950 களில் புதியவடிவம் பெற்றது. களனியில் இடம்பெற்ற மாபெரும் பொதுக்கூட்டமொன்றில் சிங்கள மக்களை நோக்கி இதேவ மொத்தீவ அமர வாஞ்சதேரோ பின்வருமாறு உரையாற்றினார்.
“உங்கள் நாடு, சமயம், பண்பாடு என்பவற்றில் உங்களுக்கு அன்பிருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடினும் அதைப் பொருட்படுத்தாது தமிழரை இலங்கையிலிருந்து துரத்தியடியுங்கள். எவரது உடலிலும் ஒரு துளியேனும் சிங்கள இரத்தம் இருப்பின் தமிழரைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது. தமிழர்கள் எங்களது முதன்மையான எதிரிகள். “
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
இதுபோன்ற தேரர்களின் ஆசிர்வாதத்தோடும் அவர்களது மகாசங்கத்தின் ஆணைகளை அரசியலாக்கும் சிங்கள இனவெறி அரசுகளின் 75 ஆண்டுகால இன அழிப்பு நடவடிக்கைகளில் மாற்றம் ஏதும் நிகழப்போவதில்லை. இன்று எமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் தமிழ்த்தேசிய சக்திகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் சிங்கள இனவாத அரசும் அதற்கு முண்டுகொடுக்கும் பிராந்திய வல்லரசாக முனையும் நாடுகளும் தீவிரமாக ஈடுபடுகின்றன. ஒரு தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற நிலையெனில் சாதாரணமான தமிழ்மக்களின் நிலை எவ்வாறென ஜனநாயகம் போதிக்கும் உலகநாடுகள் சிந்திக்கவேண்டும். இதனைத்தடுத்து நிறுத்தி அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டியது தமிழ்மக்களாகிய எமது கடமையாகும். அரசியல்ரீதியாக திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் அவர் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈழத்தமிழர்கள் முழுமையாக வழங்கக்கூடிய ஆதரவு மூலமாகவே அவர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.



