பொருளாதார நெருக்கடி பாரிய சுகாதார நெருக்கடியாக நிலைமாற்றமடைகிறது

39 0

நோய்நிலைமைகளால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக சுகாதாரத்துறை இயங்கவேண்டுமே தவிர, சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாகத் தொடர் மரணங்கள் ஏற்படக்கூடாது.

இருப்பினும் சுகாதாரத்துறைசார் தொழில்வல்லுனர்களின் வெளியேற்றம் மற்றும் மருந்துப்பொருள் கொள்வனவுடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய தீர்மானங்கள் என்பவற்றால் பொருளாதார நெருக்கடியானது தற்போது பாரிய சுகாதார நெருக்கடியாக நிலைமாற்றமடைந்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மையகாலத்தில் சுகாதாரத்துறையில் அவதானிக்கப்படும் நிலைவரம் மிகப்பாரதூரமானதாகும். நோய்நிலைமைகளால் ஏற்படக்கூடிய மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதமாக சுகாதாரத்துறை இயங்கவேண்டுமே தவிர, சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக ஏற்படும் மரணங்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்வதால் எவ்வித பயனும் இல்லை. இந்நெருக்கடியைப் பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து, எமது நாட்டைச்சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள்.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு சுமார் 11 இலட்சம் பேர் நாட்டைவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்நெருக்கடி சுகாதாரத்துறையில் மாத்திரமன்றி, அனைத்துத் தொழிற்துறைகளுக்கும் பொதுவானதாக இருக்கின்றது. இருப்பினும் குறிப்பாக வைத்தியர்கள், தாதியர்கள், உதவி வழங்குனர்கள், மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதகர்கள், மருந்தாக்க நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதனால், பொருளாதார நெருக்கடியானது இப்போது பாரிய சுகாதார நெருக்கடியாக நிலைமாற்றமடைந்துவருகின்றது.

இந்தியாவின் கடனுதவியில் 114 மில்லியன் டொலர் நிதி தேசிய மருந்தாக்கக்கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டது. அந்நிதியில் இதுவரை 68.5 மில்லியன் டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்நிதி அத்தியாவசிய மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை என்று அண்மையில் இலங்கை மருத்துவ அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கின்றது.

எனவே இவ்விடயத்தில் தீர்மானங்களை மேற்கொண்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோன்று இந்தியக் கடன் பதிலுதவி மூலம் கொண்டுவரப்பட்ட மருந்துப்பொருட்களில் 80 சதவீதமானவை அனுமதி அளிக்கப்படாத மருந்துகள் என்று வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் இன்னமும் சீரடையவில்லை. அண்மைய தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் விவசாயத்துறையின் வளர்ச்சி மிகவும் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது. அதேவேளை உற்பத்தித்துறையின் வளர்ச்சி 23.4 (-) சதவீதமாகக் காணப்படுவதுடன் சேவைத்துறை 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே பணவீக்கம் வீழ்ச்சியடைவதாக அரசாங்கம் கூறினாலும், தற்போதைய பொருளாதாரக்கொள்கையின் விளைவாக எதிர்மறையான பொருளாதார வளர்ச்சிப்போக்கையே அவதானிக்கமுடிகின்றது. பணவீக்கம் குறைவடைந்தாலும், பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையவில்லை. அதுமாத்திரமன்றி வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படாததன் காரணமாக மக்கள் பாரிய வாழ்வாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

மேலும் நாட்டுக்கான வெளிநாட்டுப்பணவனுப்பல்களில் அதிகரிப்பு ஏற்படவில்லை. கடந்த 2016 – 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட உயர்வான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மூலமான வருவாய், தற்போது 3.7 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஏற்படக்கூடிய டொலர் நெருக்கடி, மருத்துவமனைகளுக்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மருந்துப்பொருட்களைக் கொள்வனவு செய்வதில் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும்.

அதேபோன்று அண்மையகாலங்களில் நாட்டில் புதிய வெளிநாட்டு முதலீடுகள் எவையும் இடம்பெறவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் 2.1 பில்லியன் டொலராகப் பதிவான வெளிநாட்டு முதலீடுகள், தற்போது 1.1 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதமாகக் காணப்பட்ட கடன்களின் அளவு, இப்போது 115 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றது. எனவே நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவான முன்னேற்றங்கள் எவையுமின்றி இன்னமும் மோசமான நிலையிலேயே இருக்கின்றது.

பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதன் விளைவாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்தியா விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்புவதற்கு நினைத்துக்கூடப் பார்த்திராத காலத்தில், ரொக்கெட் அனுப்பிய குடும்பமொன்று இலங்கையில் இருந்தது.

எமது நாட்டின் அரசியல் ஒரு குடும்பத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப ரீதியில் இந்தியா முன்னேறிச்சென்றுவிட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலும்கூட இப்போதும் சிலர் வெட்கமின்றி வாக்கு சேகரிக்கும் பிரசாரங்களுக்காக நாடு முழுவதும் செல்கின்றார்கள். பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் அன்றாடம் உண்பதற்கு உணவின்றித் தவிக்கும் சூழ்நிலையில், இத்தகைய நபர்களால் கூறப்படும் பொய்யான கதைகளை நம்பி ஏமாறவேண்டாம் என்று நாட்டுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.