திருகோணமலையில் மண் அகழ்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

107 0

திருகோணமலையில் வெருகல் நாதனோடை பகுதியில் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (28) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து மணல் அகழ்வு நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

வெருகல் நாதனோடை பகுதியில் மண் அகழ்வதற்காக தனியார் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, இன்று மண் அகழ்வதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெருகல் பிரதேசத்தின் 10 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் மணல் ஏற்றுவதற்காக செல்லும் வழியை மறித்து அப்பகுதியில் மண் அகழ்வதினால் வெருகல் ஆற்றின் அணைக்கட்டு பாதிக்கப்படும் எனவும் இதன்மூலம் அணைக்கட்டு உடைக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி அப்பகுதியில் மணல் அகழ்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வெருகல் – நாதனோடை அணைக்கட்டை குறித்த தனிநபர் இலவசமாக கட்டிக் கொடுத்திருந்தார் என்றதன் அடிப்படையில் குறித்த மண் அகழ்வுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த அணைக்கட்டு காலாகாலமாக உடைப்பெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவந்த நிலையில் குறித்த அணைக்கட்டை தனிநபர் ஒருவர் இலவசமாக புணரமைத்துத் தருவதற்கு முன் வந்திருந்தார்.

அந்தவகையில், அணையினை கட்டித்தந்தால் குறித்த பகுதியில் இருக்கின்ற மண்ணை அகழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நீர்ப்பாசணத்திணைக்களத்திற்கும் அவருக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேற்கொண்ட குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அப்பகுதியில் மண் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இருப்பினும், குறித்த அணைக்கட்டு கட்டியதற்கு பதிலாக அவரால் ஏற்கனவே போதியளவான மண் அகழப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் மீண்டும் ஆழமாக மண்ணை அகழ்ந்தால் அது அணைக்கட்டை பாதிக்கும் என்பதால் அதற்கு அனுமதிக்க முடியாது எனவும் ஆற்றினுள்  அள்ளக்கூடிய நிலையில் உள்ள மண்ணை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் அகழ முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.