யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் முக்கிய அறிவிப்பு

89 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை திங்கட்கிழமை (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளை தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட தூர்வாரப்படாத குளங்கள் மற்றும் கேணிகளை மாநகர சபை பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ் பொது அமைப்புகள் மற்றும் தனியார் மூலமாக தூர்வாரி சுத்தப்படுத்த முடியுமெனவும் அதற்கு சில நிறுவனங்கள் தாமாகவே முன்வருவார்களென யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்பட்டது.

மேலும் மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள இவ்வாறான கேணிகளையும் நீர் நிலைகளையும் துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பொதுக்கிணறுகள், விவசாய கிணறுகள் பல பாழடைந்து பயன்பாடற்று காணப்படுவதாலும் அவற்றை சுத்தப்படுத்தினால் குடிநீர்த் தேவைக்கு அவற்றைப் பயன்படுத்த முடியுமெனவும் எதிர்காலத்தில் நன்னீரை சேமித்து வைக்க அவற்றை பயன்படுத்த முடியுமெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய இவ்வாறான கிணறுகள் பற்றிய விபரங்களை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பித்து வறட்சியினால் பாதிக்கப்பட்டு இருக்கும் அவ்வப் பிரதேச மக்களுக்கு வேலைக்காக உணவு பெறும் திட்டத்தினூடாக அக் கிணறுகளை துப்புரவு செய்வதற்கான சாத்தியம் பற்றி ஆராயுமாறு உலக உணவுத் திட்ட அலுவலரிடம் அரசாங்க அதிபரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.