8 மாத குழந்தை : மெனிங்கோகோகஸ் பக்டீரியா மரணத்துக்கான காரணமாக இருக்கலாம்?

211 0

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 8 மாத குழந்தை மெனிங்கோகோகஸ் பக்டீரியா நோய்த்தொற்று காரணமாக மரணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக குறித்த குழந்தையின் உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு பரிசோதனைகளுக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (25) தலப்பிட்டி, மைனாகொட பிரதேசத்தை சேர்ந்த 8 மாத குழந்தை காய்ச்சல் காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் குழந்தையின் மரணம் மெனிங்கோகோகஸ் பக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் இருந்து பதிவாகிய மெனிங்கோகோகஸ் தொற்று சமூகத்துக்குள் பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வைத்தியர்களும் இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு    பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

குழந்தையின் சடலம் தொடர்பான இறுதிக் கிரியைகள் நேற்று (26) சுகாதார அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் குறித்த தரப்பினரை காலி சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை மெனிங்கோகோகஸ் பக்டீரியா   காலி சிறைச்சாலையிலேயே முதலில் இனங்காணப்பட்டதுடன் பக்டீரியா தொற்றுக்கு இலக்காகி கைதிகள் இருவர் உயிரிழந்ததுடன், தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மெனிங்கோகோகஸ் பக்டீரியா தொற்று காரணமாக அதிக காய்ச்சல், தலைவலி, கொப்பளங்கள், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

மேலும், இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.