சிறப்புரிமை என்கிற பெயரால் நீதித்துறை குறைமதிப்பீடு : சபாநாயகரை சந்திக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்

129 0

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மீது முன்வைக்கப்படும் தொடர்ச்சியான விமர்சனங்கள் நீதித்துறையின் கௌரவத்தினை குறைமதிப்பீடு செய்வதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதியை தனிப்பட்ட முறையிலும், அவருடைய தீர்ப்பினையும், பாராளுமன்றத்தில் சரத் வீரசேகர கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் நிலையில், வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை (25) கண்டனப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள்.

அத்தோடு குறித்த விடயம் சம்பந்தமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், குறித்த விவகாரம் சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அண்மைய காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகின்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் ஆகியோர் தொடர்பில் பாராளுமன்றத்துக்குள் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அத்துடன் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் தொடர்பிலும் சில விமர்சனங்கள் பாராளுமன்ற சபைக்குள்ளிருந்து வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், இறுதியாக பாராளுமன்ற உறுப்பினரால் நீதிபதி ஒருவர் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கவனத்தில் எடுத்துள்ள நாம் இவ்விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமித்துள்ளோம்.

அக்குழுவின் அவதானங்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்த கட்டமாக இறுக்கமான நடவடிக்கைகள் சிலவற்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேபோன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவையும் நேரில் சந்தித்து இந்த விடயங்கள் சம்பந்தமான எமது கரிசனைகளை வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.