எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 8 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் நிதியை வழங்க இணக்கம்

52 0

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் இலங்கைக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் மற்றும் ஏனைய நிதியை ரூபாவிலும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து சட்டமாதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற அமர்வின் போது ‘எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை என்ன ?என்று எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான  லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததன் பின்னர் கப்பலின் காப்புறுதி நிறுவனம் வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியது.

இதற்கமைய  சட்டமாதிபர்,மீபா உட்பட உரிய விடயதானத்துக்கு பொறுப்பான தரப்பினர்களை உள்ளிடக்கிய ஒன்பது பேர் கடந்த மாதம் சிங்கப்பூருக்கு சென்று கப்பலின் காப்புறுதி நிறுவனத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கப்பலின் காப்பறுதி நிறுவனம்  8 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ரூபாவில் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனைய நிறுவனங்களின் இணக்கம் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வழக்கை வணிக மேல் நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்க வலியுறுத்தப்பட்டது.வணிக மேல் நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்குவதால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது,சாதகமான அம்சங்களே தோற்றம் பெறும் என்றார்.