இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் சோதையன்கட்டு பகுதியில் ஒப்பந்த வேலையில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவள் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள், இராஜாங்க அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் நேற்று(25) பிற்பகல் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர்,சோதையன்கட்டு பகுதியில் கிரவள் அகழ்வு இடம்பெறுவதை அவதானித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உக்காத கழிவு உள்ளதாகவும் அது உடைப்பெடுத்தால் ஆற்றில் இலக்கும் அபாயம் உள்ளதாகவும் மற்றும் சோதையன் கட்டு எனப்படுவது தமிழர் பாரம்பரிய கட்டாகும் அதை தகர்த்தி கிரவள் அகழ வேண்டாம் எனவும் தெரிவித்து குறித்த வேலையினை உடன் நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இருப்பினும் தாம் குறித்த பகுதியில் வன இலாகா திணைக்களம் , புவிச்சரிதவியல் திணைக்கள ஆகியவற்றில் அனுமதி பெற்றுத்தான் குறித்த ஒப்பந்த வேலையினை பெற்றதாகவும் அதிக பணம் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்து வேலையினை இடைநிறுத்த முடியாது என ஒப்பந்த வேலையில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்கக்ம் ஏற்பட்டது. இதனை தொலைபேசியில் வீடியோ பதிவி செய்தார் என அவ்விடத்தில் இரு தரப்பிற்கிடையில் முறுகல் நிலை உருவானது.

