“கனகராஜை ஜெயலலிதாவின் ஓட்டுநர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவின் ஓட்டுநராக இருந்தவர். ஜெயலலிதாவின் ஓட்டுநர் எனக் கூறினால் நீதிமன்றத்தின் வழியாக வழக்கு தொடர்வோம். ஜெயலலிதாவுக்கு கனகராஜ் ஒருநாள் கூட ஓட்டுநராக இல்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது “அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த வெற்றி. அதிமுக பலமாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அதிமுக பெறும். தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கும். இந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

