சீனர்களுக்கு மண்டரின் மொழியில் ஒன்லைன் மூலம் விசா குறித்து ஆராய்வு

147 0
சீனப் பிரஜைகள் இலங்கைக்கு வரும்போது அவர்களுக்கு வருகை தரும் விசா வசதியை (on arrival visa facility) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மண்டரின் மொழியில் ஒன்லைன் மூலம் விசா விண்ணப்பங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை குறித்து சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடியது.

அதற்கமைய, வெளிவிவகார அமைச்சில் செயற்படும் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு வலயம் தொடர்பான பிரிவின் பணிகள் மற்றும் அந்த வலயம் சம்பந்தப்பட்ட இந்நாட்டின் இராஜதந்திரக் கொள்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த வலயத்திலுள்ள நாடுகள் இலங்கையுடன் நட்புரீதியான கொள்கையிலிருந்து செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்ததுடன், அந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது குழுவின் கருத்தாக இருந்தது. அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடித் தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு அதிகாரிகளுக்குக் குழு ஆலோசனை வழங்கியது.

அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள்/உயர் ஸ்தானிகராலயங்களின் இணையத்தளங்கள் ஊடாக இலங்கை பற்றிய சரியான தகவல்களை வழங்கி இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

 

அதிக கொள்வனவுச் சக்தி கொண்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கும் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என சுட்டிக்காட்டிய குழு, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விரைவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியது.

சீனப் பிரஜைகள் இலங்கைக்கு வரும்போது அவர்களுக்கு வருகை தரும் விசா வசதியை (on arrival visa facility) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மண்டரின் மொழியில் ஒன்லைன் மூலம் விசா விண்ணப்பங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பான அறிக்கையொன்றை குழுவுக்கு வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார். அதற்கு மேலதிகமாக, கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான  ஜீ.எல். பீரிஸ், கௌரவ நிரோஷன் பெரேரா,  எஸ்.எம்.எம். முஷாரப், காவிந்த ஹேஷான் ஜயவர்தன, அகில எல்லாவல, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், யதாமினி குணவர்தன மற்றும் மதுர விதானகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.