ஜேர்மனியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவர் கைது

237 0

ஜேர்மனியில் நடந்த கைகலப்பின்போது ஜேர்மானிய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியிலுள்ள சிறிய நகரமான Wittlichஇல் நடைபெற்றுவரும் பொருட்காட்சி ஒன்றைக் காண வந்த சிலருக்குள் திடீரென வாக்குவாதம் உருவாகியுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பாக மாற, 28 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவர் குத்தப்பட்டதும், இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

ஆனால், அவர்களில் அந்த ஆண்கள் இருவரையும் பொலிசார் விரைவாகப் பிடித்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் அமெரிக்க ராணுவ வீரர்கள் எனத் தெரியவரவே, அவர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

நேட்டோ விதிகளுக்கிணங்க அமெரிக்க அதிகாரிகள் அந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள் என ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியில் 34,500 அமெரிக்க ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ள நிலையில், இதுவரை இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததில்லை என நகர மேயரான Joachim Rodenkirch தெரிவித்துள்ளார்.