செப்.3-ல் தென்காசியில் இருந்து 2-ம் கட்ட நடைபயணத்தை தொடங்கும் அண்ணாமலை: 27-ம் தேதி கோவையில் நிறைவு

145 0

அண்ணாமலையின் 2-ம் கட்ட நடைபயணம் செப்.3-ல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணத்தின்போது 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தற்போது, திருநெல்வேலியில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை அங்கு தனது முதல் கட்ட நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

அதன்பிறகு ஓய்வெடுக்கும் அண்ணாமலை, அடுத்தக்கட்டமாக செப்.3-ம் தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தொடங்குகிறார். அதன்படி, 3-ம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி, தேனி, திண்டுக்கல், நீலகிரியில் நடைபயணம் மேற்கொண்டு, கோவையில் தனது 2-ம் கட்ட நடைபயணத்தை செப்டம்பர் 27-ம் தேதி நிறைவு செய்கிறார்.

2-வது கட்ட நடைபயணம் செப்.3-ல் தென்காசியில் தொடங்கி, கோவையில் 27-ம் தேதி முடிவடைகிறது. அண்ணாமலை 20 நாட்களில் 37 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபயணத்தை நிறைவு செய்திருக்கிறார். திருநெல்வேலியில் 41-வது சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்கட்ட நடைபயணத்தை அவர்நிறைவு செய்வார்.

செப்.6-ம் தேதி சங்கரன் கோயிலில் நடைபயணத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதைத்தொடர்ந்து, ஊட்டி, கோவையில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

மதுரையில் மத்திய அமைச்சர் பங்கேற்கும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம், அவர் தேதி ஒதுக்கிய பிறகு திட்டமிட்டபடி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.