மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை கைப்பற்றியது ஈராக் ராணுவம்

240 0

மேற்கு மொசூல் நகரின் பழைய நகரத்தை ஈராக் ராணுவம் கைப்பற்றியுள்ளது. தீவிரவாதிகளை சுற்றிவளைத்து ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூலை கைப்பற்ற ஈராக் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. அதற்கான பலனும் கிடைத்து வருகிறது. தற்போது மேற்கு மொசூல் நகரின் பெரும்பகுதியை ஈராக் ராணுவம் கைப்பற்றி உள்ள நிலையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இதில் நேற்று தீவிரவாதிகளுடன் நடைபெற்ற கடுமையான தாக்குதலில் மொசூலின் மேற்கு பகுதியில் உள்ள பழைய நகரத்தின் மைதானம் ஒன்றை ஈராக் ராணுவம் கைப்பற்றி உள்ளது.

ஈராக்கின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான மொசூல் நகரின் மேற்கு பகுதியை கைப்பற்ற பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் ஈராக் ராணுவம் போராடி வருகிறது. அதன் பயனாக மேற்கு பகுதியில் உள்ள பல இடங்களை ராணும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மாறாக ஐ.எஸ் தீவிரவாதிகள் பொதுமக்களை கேடயமாக வைத்து தாக்குதல் நடத்தி வருவதால், முதலில் பின்வாங்கிய ராணுவம் தற்போது தீவிரவாதிகளை சுற்றிவளைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தொடர் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்தனர்.

அமெரிக்க ராணுவத்தின் வான்வெளி உதவியுடன், ஈராக் ராணுவம் தரைப்படையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தி வருவதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தீவிரவாதிகளை ஒழிக்க, பீரங்கி உள்ளிட்ட ஆயுதமேந்திய பெரிய வாகனங்கள் பின்வாங்கி உள்ளன. அதற்கு பதிலாக சிறிய ரக டிரான்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக ஈராக் மத்திய காவல்துறை அதிகாரி லெட்டினன்ட் ஜெனரல் ரயீத் ஷாகீர் ஜவ்தாவ் தெரிவித்துள்ளார்.

அதன் பயனாக மேற்கு மொசூலின் பழைய நகரத்தில் உள்ள அல்-பாஷா மசூதி, பாப் அல்-சாராய் மார்க்கெட் உள்ளிட்ட இடங்கள் ஈராக் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.