இலங்கை நீதிபதிகளை மாத்திரமே உள்ளடக்கிய விசாரணை என்பது திருடனே திருடனை விசாரணை செய்வதற்கு ஒப்பானது-செந்தில்நாதன் மயூரன்

228 0

இலங்கை நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் உள்ளக பொறிமுறையினூடாக தீர்வு கிடைத்துவிடும் என நம்பி அதனை ஏற்கப்போதவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

ஐ நா மனித உரிமைப்பேரவையினால் எதிர்வரும் வாரம் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக அவரது எண்ணப்பாட்டை கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமை போரவையின் அறிக்கையே அதிகளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கான காரணம் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களுக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பே காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் ஆட்சி செய்த எந்த பெரும்பான்மை அரசும் தமிழர்களின் அபிலாசைகளை புரிந்து சிறுபான்மை இனத்தவர்கள் சமமாக வாழ்வதற்கான எந்தவித நல்லெண்ண செய்ற்பாட்டையும் முன்வைக்கவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாகவிருந்தாலும் சரி, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதாக இருந்தாலும் சரி, அரசியல்கைதிகள் விடுதலையானாலும் சரி இழுத்தடிப்புகளையும் சர்வதேசத்தின் கண்துடைப்புக்கான செயற்பாடுகளையுமே முன்னெடுத்து வந்துள்ளது.

இந் நிலையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்து வாக்களித்த புதிய அரசு தன்னை நல்லாட்சி அரசு என வெளியில் காட்டினாலும் இலங்கையில் வாழும் தேசிய இனங்களை ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை இதுவரை ஏற்புடையதாக்கவில்லை.

இவ்வாறான சூழலிலேயே இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளக பொறிமுறையினூடான விசாரணை செய்வதற்கும் இலங்கை அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது.

எமது கண்முன்னேயே இலங்கை நீதித்துறையினை நம்பி ஏமாந்த வரலாறுகள் பாடம்புகட்டி நிற்கின்றது. குறிப்பாக ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பும், குமாரபுரம் படுகொலை வழக்கும், தீருக்கேதீஸ்சரம் மனிதபுதைகுழி தொடர்பான பகுப்பாய்வுக்குஉட்படுத்துவதற்கான செயற்பாடுகளும் தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையும் நீதித்துறை மீதான நம்பிக்கை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற காலத்தில் அப்போதைய பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிஸ் தன்னை குறித்த பதவியில் இருந்து அகற்ற வேண்டாம் எனவும் எதனை நீங்கள் சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருப்பதாக தன்னிடம் கூறியதாக ஜனாபதியே அண்மையில் கூறியிருந்தார்.

மக்கள் கடவுளாக நம்பும் ஓர் நீதிபதியே இவ்வாறு செயற்பட்ட வரலாறு இந்த இலங்கைத்தீவில் ஜனாதிபதியினாலேயே பதிவிடப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நீதிபதிகளை வேண்டாம் என்பது வரலற்று தவறாகிவிடும்.

அத்துடன் இலங்கை நீதிபதிகளை மாத்திரமே உள்ளடக்கிய விசாரணை என்பது திருடனே திருடனை விசாரணை செய்வதற்கு ஒப்பானதாக அமைந்துவிடும் என்பதனால் சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்பு நீதிமன்ற முறையே இலங்கை போன்ற நாடுகளை விசாரணை செய்வதற்கு சாலச்சிறந்ததாக அமையும் என தெரிவித்தார்.