ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்திகதி மாலை பிரசாரம்

339 0

ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் 23-ந்தேதி மாலை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டும் அவர் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கிறார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.அவர் தனது வேட்பு மனுவை வருகிற 23-ந்தேதி தாக்கல் செய்கிறார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அன்றைய தினமே மாலையில் டி.டி.வி.தினகரன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டும் அவர் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கிறார். ஜீப் செல்ல முடியாத குறுகிய சாலைகளில் ஆட்டோவில் சென்று ஓட்டு கேட்க உள்ளார்.டி.டி.வி.தினகரன் ஒவ்வொரு நாளும் எந்தெந்த பகுதியில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வார் என்பது பற்றி முடிவு செய்ய நாளை மாலை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பொறுப்பாளர்களுடன் விவாதித்து பிரசார பயணம் தயாரிக்கப்படுகிறது. தண்டையார்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை வருகிற 22-ந்தேதி டி.டி.வி. தினகரன் திறந்து வைத்து பேசுகிறார்.இதையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க நேற்று மாலை டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்றார். அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், அலெக்சாண்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.அங்கு நிருபர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.

இதன்பிறகு தண்டையார் பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் தேர்தல் பணிமனைக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க 30 அமைச்சர்கள், 121 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள் 23-ந்தேதியில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக அமைச்சர்கள் தங்கி பணியாற்றுவதற்காக வார்டு வாரியாக கட்சி தேர்தல் அலுவலகம் திறக்கப்படுகிறது. இதற்காக 22-ந்தேதி மாலையில் கட்சி செயல்வீரர்கள் கூட்டமும் தண்டையார்பேட்டையில் நடைபெற உள்ளது.டி.டி.வி. தினகரன் 23-ந்தேதி முதல் வார்டு வாரியாக தினமும் காலை, மாலையில் ஓட்டு கேட்டு செல்லும் வகையில் அவரது பிரசார பயணம் தயாரிக்கப்பட்டு வருகிறது.அவர் ஓட்டு கேட்டு செல்லும் பகுதிகளில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கவும் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.