மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்கள்-சிறிசேன

193 0

தகவல் அறியும் சட்டமும், கணக்காய்வு சட்டமும் நாட்டின் அரச சேவையிலும், அரச நிதி முகாமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்களாகுமென, ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் அரசியலிலும் அரச சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை ஏற்படுத்துவதற்கான விதிமுறைகளும், சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் அவற்றுள் சில எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 34ஆவது ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் அரச சேவையில் போன்றே ஏனைய துறைகளிலும் ஏற்பட்டுவரும் இந்த மாற்றமானது பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் சமூகத்தின் நிலவுகைக்கு அவசியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் காணப்பட வேண்டிய தொடர்பினை இதன்போது மீண்டும் வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள், அரசியல்வாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படவேண்டிய தொடர்பில் ஏற்படும் குறைவானது நாட்டின் அபிவிருத்திக் குறிக்கோள்களில் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், அமைச்சுக்களினதும், திணைக்களங்களினதும் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் என்பவற்றை நடாத்துதல் தொடர்பான வருடாந்த கால அட்டவணையை தயாரிக்க ஜனாதிபதியின் செயலாளருக்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், அது தொடர்பாக அமைச்சரவைக்கும் தெரிவித்துள்ளதாக

குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் இதனூடாக இவ்வாறான கூட்டங்கள் நடத்துதல் தொடர்பாக ஏற்படும் தாமதங்களைத் தவிர்த்து உரிய நேரத்தில் ஒன்றுகூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை வினைத்திறனாகவும் முறையாகவும் முன்னெடுக்கமுடியும் என்றும் தெரிவித்தார். தகவல் அறியும் சட்டம் பற்றிய ஆலோசகராகச் செயற்படும் பியதிஸ்ஸ ரணசிங்கவின் விசேட விரிவுரையும் இதன்போது இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான வஜிர அபேவர்தன, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரும், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன்,  பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்கநாயக்க உள்ளிட்ட நிர்வாக சேவையின் உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.