கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது – யாழ் பல்கலை மாணவர்கள் களத்தில்

248 0
சொந்த நிலத்தை மீட்பதற்காக கேப்பாபுலவு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த முதலாம் திகதி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாதிரிக் கிராமங்களில் கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் மக்கள் தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிகபீட மாணவர்கள் குறித்த மக்களின் நிலமீட்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டம் இடம்பெற்று இடத்துக்கு சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை,கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை 14 ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் குறித்த காணி உரிமையாளரின் உறவினர் ஒருவர் நேரில் சென்று குறித்த மக்களின் நிலைமைகளை பார்வையிட்டார்.
பின்னர், தமது உறவினர்களுடன் பேசி சாதகமான முடிவை வழங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமக்கு சாதகமான முடிவு வரும்வரை போராட்டம் தொடரும் எனவும், காணி உரிமையாளர் தமக்கு சாதகமான பதிலை தருவார் என நம்பியவாறு தாம் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.