அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றி சொல்லும் கதை என்ன?- இ.இ. கவிமகன்.

433 0

இன்று வெற்றிச் செய்தி ஒன்று உலக அரங்கில் தமிழர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மகிழ்வை உருவாக்கி உள்ளது. ஆனந்தக்கண்ணீர் மல்கியவர்களும், வெற்றிவாகைச் செய்தி கேட்டு துள்ளிக்குதித்தவர்களும் அந்த மைதானத்தின் மீது தமது விழிகளை பதித்து அந்த வெற்றிச் செய்திக்காக காத்திருந்த தருணங்களை மறக்க முடியாது. அந்த வெற்றிச்செய்தி என்ன சொல்கிறது? இதற்கான பதில் வேறொன்றும் இல்லை.

அனைத்துலக அளவிலான அங்கீகரிக்கப்படாத நாடுகளின் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஒரு தகுதிகாண் தெரிவில் தமிழீழ அணி மிகவும் வீரத்தோடும் ஓர்மத்தோடும் விளையாடி இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணியாக நிமிர்ந்து நிற்கின்றது என்ற செய்தி இப்போது எம்மவரிடையே பெரும் மகிழ்வுடனான பேசுபொருளாக உள்ளது.

உண்மை தான், ஒரு நாட்டுக்கான அங்கீகாரத்தை அந்த அணி பெறவில்லை. என்றாலும், அந்த நாட்டின் தேசிய அணி வீரர்களாக தம் வீரத்தின் வெளிப்பாடுகைகளால் பெரு வெற்றியை சுவைத்துக் கொண்டார்கள். அப்பெரு வெற்றியை பெற்றுத்தந்த தமிழீழ அணியின் ஒவ்வொரு வீர தம்பிகளும் நிச்சயமாக போற்றுதலுக்குரியவர்களே. கனேடிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் இருந்து ஒன்றிணைக்கப்பட்ட இந்த அணி வீரர்கள், நிதானமாகவும் வெற்றிக்கனியை சுவைக்கும் ஓர்மத்துடனும், புதிய திட்டமிடல்களுடனும் களமிறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

எமது நாடு அங்கீகரிக்கப்படாத நாடு என்ற எந்த மனச்சோர்வும் அவர்களிடம் இல்லை. தமிழீழத்தின் செல்லக் குழந்தைகளாகவே களங்கண்டு தமது பெரு வெற்றியை அவர்கள் சுவைத்திருக்கிறார்கள். அந்த வெற்றிக்கனியை பறித்து தாம் நேசிக்கும் தமிழீழத்தின் தேசியக்கொடிக்கு முன்பாக சமர்ப்பித்திருக்கிறார்கள்.

உண்மையில் தமிழீழத் தேசியக்கடமையை சரியாக செய்துள்ளார்கள்.

இது இதோடு மட்டும் நின்று போகப் போவதில்லை. அது தொடரும். அடுத்த படிநிலைக்கு சென்று உலக கிண்ண கோப்பையைக் கைப்பற்றும் அணியாக நிச்சயம் உருவெடுத்து நிமிர்ந்து நிற்கும். இது இப்போது அனைத்துலக அரங்கில் தமிழீழ தமிழர்களின் விருப்பங்களில் ஒன்று. இந்த போட்டியின் வெற்றியானது அடுத்த வருடம் நடைபெற இருக்கும் அங்கீகரிக்கப்படாத நாடுகளின் 16 அணிகள் பங்கெடுக்கும் உலககிண்ணப் போட்டிகளில் தமிழீழ அணி பங்கெடுக்க கூடிய வாய்ப்பை கொடுத்துள்ளது. அதனால் இப்போது எம்மவர்களிடையே மேலெழும் எதிர்பார்ப்பு எம் தமிழீழ அணி உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று தமது வெற்றிச்செய்தியை நிலைநிறுத்த வேண்டும். அதுவே இப்போது இருக்கும் உலக ஒழுங்குக்கு நாம் சொல்லும் ஒரு செய்தியாகும்.

இன்றைய உலக ஒழுங்கு என்பது, தமிழீழ அரசின் மீது பொல்லாத பொல்லாப்புக்களை எல்லாம் நிலைநிறுத்தி, தமிழீழ அரசு என்பது ஒரு அரசபயங்கரவாத அமைப்பு என்ற பெருங்கோடு ஒன்றினைக் கீறி எம்மை முடக்கிபோட்டுவிட வேண்டும் என்ற முக்கிய செயற்பாட்டோடு ஒன்றிக் கிடக்கிறது. அதனால் தான் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பான காலத்தில் சரவதேச நாடுகளின் பார்வை எம் நிழலரசு மீது விழுந்து தொலைத்தது.

உலகவல்லரசுகள் விரும்பாத வகையில் நிமிர்ந்து நின்ற தமிழீழ அரசின் ஒவ்வொரு கட்டமைப்பும் அவர்களுக்கு பெரும் தலைவலியாகியது. சண்டைக் களங்களாக இருக்கட்டும், படைய கட்டமைப்பாக இருக்கட்டும், மக்களுக்கான பணிகளாக இருக்கட்டும் அல்லது சர்வதேச அரசியல்பணியாக இருக்கட்டும் அனைத்தும் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நிலைநிறுத்தப்பட்டு ஓங்கி உயர்ந்து நின்றதை இந்த வல்லாதிக்க சக்திகள் என்றும் விரும்பாமல் வீழ்த்திவிடத்துடித்தன. அதனால் திட்டமிட்டு வீழ்த்தி முடித்தன.

அன்று நிழலரசின் ஒரு கட்டமைப்பான விளையாட்டுத்துறையை பற்றி சிறிதாக அலசிப்பார்த்தால், தமிழீழதேசத்தின் விளையாட்டு முனைப்புக்கள் தொடர்பாக பணிகளை முன்னெடுக்க என்று உருவாக்கப்பட்டிருந்த ஒரு பிரிவு ஆகும். அது  தமிழீழ அரசியல்துறையின் ஒரு பிரிவாக திரு பாப்பா என்ற போராளியின் நிர்வாக கட்டமைப்பில் உருவாக்கப்பெற்றது. இப்பிரிவின் உருவாக்கத்துக்குப்பின் தமிழீழ தேசிய விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவிலான சுற்றுப்போட்டிகள் மட்டுமல்லாது ஆண் பெண் என இருபாலருக்குமான விளையாட்டு முனைப்புக்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்பாகவே தமிழீழத் தேசிய அணி புலம்பெயர் தேசங்களுக்கு வருகை தந்ததும் அதன் பின்பே தமிழீழ தேசிய அணிகள் சர்வதேச போட்டிகளில் பங்கெடுத்ததும். இப்பிரிவின் உருவாக்கத்துக்குப் பின்பான காலம் தமிழீழ விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அதி சிறந்த வீரர்கள் தொடக்கம் சாதாரண வீரர்களுக்கும் அதிக சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் வளர்வதற்கு வழி கொடுக்கப்பட்டன. அப்போது தான் தமிழீழ தேசிய பெண்கள் வலைப்பந்தாட்ட அணி தமது வீரத்தை புலம்பெயர் தேசங்களில் நிரூபித்து வெற்றிவாகை சூடி திரும்பியது. அவர்களை தேசியத்தலைவர் உடனடியாக அழைத்து பாராட்டி மதிப்பளித்திருந்தார். திரு. பாப்பா அவர்கள் ஒரு நிலையில் பொறுப்பு நிலையில் இருந்து படையணி வேலையாக பயணித்த போது திரு செம்பியன் அல்லது ராஜா என்ற போராளி விளையாட்டுத்துறையை பொறுப்பெடுத்து வழி நடாத்தினார்.

இது தமிழீழ நிழலரசு காலத்திலும் சரி பின்பான காலத்திலும் சரி புலம்பெயர் தேசங்களில் தேசியத்தலைவரினால் நேரியமுறையில் வழிநடாத்தப்பட்டு அனைத்து நாடுகளிலும் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்காக தனி அலகான விளையாட்டுத்துறைகள் உருவாக்கப்பட்டன. அவ்வகையிலான விளையாட்டுத்துறைகளின் செயற்பாடுகளே இத்தகைய வெற்றிகளுக்கு ஊன்றுகோல் என்றால் அவை நிசமானவை.

தமிழீழ நிழலரசு அன்று திட்டமிட்டு சர்வதேசத்தால் முடக்கப்பட்டு மௌனிக்கப்படாமல் நிமிர்ந்து நின்றிருந்தால், நிச்சயமாக உலக அரங்கில் இன்று ஏனைய வல்லாதிக்க சக்திகளால் விரும்பியோ விரும்பாமலோ எம்மையும் எம் நிழலரசையும் ஏற்க வேண்டிய அல்லது அங்கீகரிக்கப்பட வேண்டி நிலை தோன்றியிருக்கும். ஆனால் அதன்முன்பாகவே பச்சோந்திகளும் காட்டிக்கொடுக்கும் துரோகக்கும்பல்களும் சர்வதேசமும் இணைந்து எம் தேசத்தை உருக்குலைத்துவிட்டார்கள். ஆனாலும் தமிழீழத் தேசியத்தலைவரது எண்ணவோட்டத்திற்கு ஏற்ப புலம்பெயர் இளையவர்கள் தமது தேசியக் கடமைகளை இப்போது சீராக கரத்தில் எடுத்துள்ளார்கள் என்பது தான் நிசம்.

அதனால் என்றோ ஒரு நாள் விடியும் எம் தேசம். அன்று அங்கீகரிக்கப்பட்ட நாடாக நிமிர்ந்து மிளிரும் எம் தமிழீழ தேசம். அன்று எமது தமிழீழ தேசிய அணி அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கு இடையிலான உலக கிண்ணத்தை கைப்பற்றும் அணியாக அல்லாது, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் நிமிர்ந்து நிற்கும் அணியாக தமது வலது கரத்தினை நெஞ்சிலே குவித்து தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தி, தமது வெற்றிக்கனியை எம் கொடிக்கு படைப்பார்கள். அது நிச்சயமாக எமது இளைய சமூகத்தால், அதாவது தமிழீழ தேசத்தை நேசிக்கும் எம் இளையவர்களால் முடியும் என்பது உலக அரங்கில் நிலைத்துவிட்ட உண்மை.

அதன் எதிரொலிதான் தமிழீழ தேசிய அணியின் அங்கீகரிக்கப்படாத நாடுகளிக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் வெற்றிச் செய்தி என்பதில் அசையாத நம்பிக்கை உண்டு.