புதிய அரசியல் அமைப்பிற்கு ஹெல உறுமய மறுப்பு!

241 0

புதிய அரசியல் அமைப்பிற்கு ஜாதிக ஹெல உறுமய இணங்கவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தேச புதிய அரசியல் சாசனத்திற்கு கூட்டு எதிர்க்கட்சித் தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டை கேட்ட போதே நிசாந்த சிறி வர்ணசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய அரசியல் அமைப்பிற்கு இணங்குவதாக அறிவிக்கவில்லை. இணங்கப் போவதுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்கோ அல்லது அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதற்கோ இது பொருத்தமான காலமன்று.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய வகையில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பகிரும் புதிய அரசியல் அமைப்பு யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளாது.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு தொடர்பில் எழுத்து மூலம் எதிர்ப்பை வெளியிட்ட ஒரே கட்சி ஜாதிக ஹெல உறுமய கட்சியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் அமைப்பினை ஆதரிப்பதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.