சேலம் மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அடக்கம்

239 0

டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பல்வேறு அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் தனி விமானம் மூலம் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர், சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று காலை 6.10 மணிக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை மாணவரின் தாய் அலமேலுவிடம் மாவட்ட கலெக்டர் சம்பத் வழங்கினார். அதைத்தொடர்ந்து மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு கலெக்டர் சம்பத், சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


அப்போது, முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் கலெக்டரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கதறி அழுதனர். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கலெக்டர் சம்பத் ஆறுதல் கூறினார்.

பின்னர், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மக்கள் தேசம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் விடுதலை கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்பட பல்வேறு அமைப்பினரும், கல்லூரி மாணவ-மாணவிகளும் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மதியம் 1 மணியளவில் இறுதிச்சடங்கு முடிந்து மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு செவ்வாய்பேட்டை மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பிற்பகல் 2 மணியளவில் செவ்வாய்பேட்டை மயானத்தில் மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.முன்னதாக பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்களும், முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் சிலரும் கோஷங்களை எழுப்பியவாறு சேலம் 4 ரோட்டிற்கு சென்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.