வங்காளதேசம்: போலீஸ் என்கவுண்டரில் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் பலி

220 0

வங்காளதேசத்தில் போலீசார் நடத்திய அதிரடி துப்பாக்கிச்சூட்டில் ஐ.எஸ் இயக்கதினருடன் தொடர்பில் இருந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவு விடுதியில் வெளிநாட்டினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய ஜமாத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலில் மூளையாக செயல்பட்டது கண்டறியப்பட்டது.

டாக்கா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் பல இடங்களில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களை வேட்டையாட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சிட்டகாங் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த கட்டிடத்தை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் மீது போலீசார் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்ளிட்ட நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவ இடத்தில் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.