கடந்த 2011 ம் ஆண்டு பொலீஸ் காவலில் இருந்து உயிரிழந்தவரின் வழக்கு விசாரணை

305 0
பொலிஸாரின் தடுப்பக்காவலில் இருந்த போது உயிரிழந்த  இளைஞனின் உடலில் 6 வெளி காயமும் 16 உட்காயங்களும் காணப்பட்டபோதும்  அவை மரணத்தை ஏற்படுத்தக் கூடிய காயங்களாக  இருக்கவில்லை ஆனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான சான்றுகள் காணப்படுவதாக விசேட சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த  இளைஞர் ஒருவர் விசாரணையின் போது உயிரிழந்தமை தொடர்பான  வழக்குடன் தொடர்புடைய அரச சாட்சிகளின் வாக்குமூலங்கள் நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளங்செழியன் முன்னிலையில் யாழ் மேல் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டது.
குறித்த சாட்சிய பதிவுகளின் போது  விசேட சட்ட வைத்திய அதிகாரி கலாநிதி ரமேஸ் அழகியவன்ன  சாட்சியமளிக்கையில் தடுப்புக்காவலில் இருந்த போது 2011.11.26 அன்று உயிரிழந்ததாக கூறப்படும் ஸ்ரீஸ்கந்தராச சுமணன் என்பவருடைய  பிரேத பரிசோதனை கிளிநெர்சி நீதவானின் கட்ளைக்கமைவாக 2011.11.28 அன்று பொலநறுவை போதனா வைத்திய சாலையில் மேற்கொண்டேன், குறித்த சடலத்தை முதலில் பார்க்கும் போது கறுப்பு நிற பொலித்தீன் உறையில் மூடப்பட்டிருந்தது. அத்துடன் ஈரத்தன்மையாகவும் இருந்தது. சடலத்தில் கடும் பச்சை நிற ரீசேட், கறுப்பு நிற ரவுசர் அணிந்து காணப்பட்டது. வலது மணிக்கட்டில் ஒரேஞ் நிற நூல் கட்டப்பட்டது.ரவுசரில் சேறு படிந்து காணப்பட்டது.
சடலத்தின் வெளிப்புறத்தில் 6 காயங்கள்  காணப்பட்டன. அவை அனைத்தும் உராய்வுக்காயங்களாக இருந்தன. அதாவது இடது முழங்கைக்கு கீழ் உள்ள பகுதி, இடது மணிக்கட்டின் கீழ் பகுதி, இடது முதுகின் தோள்ப்பட்டை, வலுது கையின் முழங்கைக்கு கீழ் உள்ள பகுதி, வலது மணிக்கட்டின் மேல் பகுதியில் குறித்த காயம் காணப்பட்டது. மணிக்கட்டில்  கைவிலங்கு போடப்பட்டமைக்கு ஏற்றதுபோலான உராய்வு காயமும் காணப்பட்டது.
உள்ளகப்பரிசோதனை மேற்கொண்ட போது 16 காயங்களை அவதானிக்க முடிந்தது.அவை அனைத்தும் மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டது போன்ற கண்டல் காயங்கள், இடுப்பு,பிண்டம், முதுகு,இடது முழங்கையின் மேல்,கீழ் பகுதி, மணிக்கட்டின் வெளிப்பகுதி,வலது இடது காலின் கீழ்ப்பகுதி, பாதத்தின் மேற்பகுதி, முழங்காலுக்கு கீழ் பகுதி, போன்றவற்றில் அண்ணளவாக 2 சென்ரி மீற்றர் தொடக்கம் 6 சென்ரி மீற்றர் வரையான கண்டல் காயங்களாக இருந்தது. இவை முன்புறமாக குனிந்து நிற்கும் போதும்,கீழே பின்பக்கமாக விழும்போதும்,  ஓடிப்போகும் போது தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம்.ஆனால் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்களாக இவை இருக்கவில்லை. கண்ணின் உட்புறத்தில் இரத்தம் உறைந்து ம் சிறு இரத்த கசிவும் காணப்பட்டது. உடல் விறைத்த நிலையில் காணப்பட்டது.சுவாசப்பைகள் விரிவடைந்தும் இரப்பை ஆயிரம் மில்லிலீற்றர் நீரில் நிரப்பப்பட்டும் காணப்பட்டது.  கழுத்து தலை, மூளை பகுதிகளில் பாதிப்புக்கள் காணப்படவில்லை.
இரத்த மாதிரியை அரசாங்க பகுப்பாய்வு திணைக்;களத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டது அதில் நச்சுத்தன்மைகள் எவையும் இல்லை என அறிக்கை கிடைத்தது. நீரில் மூழ்கியதாக கூறப்படும் இடத்தின் நீரையும் சடலத்தில் கால் எலும்பும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பணிமனைக்கு அனுப்பிவைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கு சந்தர்ப்பம் உள்ளது. அதற்கான சாத்தியம் இல்லை எனவும் கூற முடியாது என சாட்சியமளித்தார்.
22 ஆம் சாட்சியான சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிறு குற்ற பிரிவில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஜெயரட்ணசில்வா சாட்சியமளிக்கையில்
2011.11.26 அன்று மாவீரர் தினம் ஆகையில் வெளியே ரோந்து நடவடிக்கையில் இருந்தேன்.சந்தேக நபர்களை முற்படுத்த வேண்டும் வாகனத்தை கொண்டுவருமாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதன்படி 4 சந்தேக நபர்களை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்த பின்னர் மல்லாகம் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்தினேன். 2011.11.27 ஆம் திகதி மேலதிக வி அறிக்கை ஒன்றை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தேன்.  அதில் 2011.11.22 அன்று வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டு 4 சந்தேக நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். மேலும் ஒரு சந்தேக நபரான சுமனனின் வாக்கு மூலத்தையடுத்து, தான் கொள்ளையடித்த ஆபரணங்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப்குதியில் மறைத்து வைத்திருப்பதாக அறிந்து பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகநபரை அழைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கு புறப்பட்டனர்.
2011.11.26 ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் குறித்த சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பி காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார். அவரை தேடிய பொலிஸார் 3 மணியளவில் குறித்த சந்தேக நபர் குளத்தின் அருகே சடலமாக இருப்பதை அவதானித்துள்ளனர். அவரை கிளிநொச்சி வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரேத பரிசோதனை மேற்கொள்ள கிளிநொச்சி நீதவானுக்கு அறிவித்தல் பிறப்பிக்குமாறு மல்லாகம் நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தேன் என சாட்சியமளித்தார்.
27 ஆம் சாட்சியான குற்றப்புலனாய்வு திணைக்கள பிரதான பொலிஸ் பரிசோதகர் சானக சில்வா மற்றும் 31 ஆவது சாட்சியான குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆகியோர் குறித்த விடம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாக மன்றில் சாட்சியமளித்தனர். இதனையடுத்து வழக்கு தொடுநர் தரப்பு சாட்சிய பதிவுகள் அனைத்தும் முடிவுற்றதாக பிரதி மன்றாதிபதி குமாரரட்ணம் மன்றில் தெரிவித்திருந்தார்.
அரச சாட்சியங்கள் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் 1 தொடக்கம் 8 வரையான எதிரிகளுக்கு எதிராக முதல் தோற்றளவில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்மையால் எதிரி தரப்பு விளக்கத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடாத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை எதிரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.