“கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளன.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் வகையிலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்கவிழா பொதுக் கூட்டம் ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் கலந்துகொண்டு, அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.பின்னர் இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, “பிரதமர் மோடி உலகம் முழுவதும் எங்கே சென்றாலும் பாரத அன்னையின் பெருமையை பறைசாற்றுகிறார். ஐநா சபையில் இருந்து அமெரிக்க அதிபரில் இருந்து புதிய இந்தியாவை பார்க்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனிக்கின்றனர். கோடிக்கணக்கான மக்களை பசி என்ற கோரப்பிடியில் இருந்து மோடி அரசு மீட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த அரசு வீடு கட்டிக்கொடுத்துள்ளது.
பிரதமர் மோடி ஒரு சாமானியன். தற்போது இந்தியாவில் சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. குஜராத்தில் இருந்துவந்த ஒரு சாமானியன் இந்த 9 ஆண்டுகளில் இந்திய மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். இந்த தருணத்தில் நாம் கேட்க வேண்டியது இதுதான். பாரத தாய் விழித்துஎழுந்திருக்கிறார். ஆனால் தமிழ் தாய் விழித்துஎழுந்துவிட்டாளா என்பதுதான் தற்போதைய கேள்வி.

