மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியை இம்முறை திருத்தந்தையின் பிரதிநிதி பேரயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 10 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திரு விழாவுக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர், குரு முதல்வர், மடு திருத்தல பரிபாலகர், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி (15-08-2023) இடம்பெற இருக்கின்றது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் திணைக்கள தலைவர்களை ஒன்றிணைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தோம். முன்னேற்பாடுகள் குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்துள்ளது.
இம்முறை ஆவணி மாத திருவிழாவிற்கு வழமையை விட சுமார் 7 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது. மடு திருத்தலத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் வருகின்ற திருப்பணிகளுக்கு வீடு வழங்க முடியாத நிலை உள்ளது.
எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரம் அமைத்து மடு திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர் வரும் ஆவணி மாதம் 6ஆம் திகதி (6-08-2023) கொடியேற்றத்துடன் திருவிழா ஆயத்த நவ நாட்களை ஆரம்பிக்கின்றோம்.
அதனைத்தொடர்ந்து ஆவணி 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்படும்.
பெரும் எண்ணிக்கையான மக்களை நாங்கள் எதிர் பார்ப்பதினால் நேர காலத்துடன் ஆலயத்திற்கு வருமாறு வேண்டுகின்றோம்.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இடம் பெறுகின்ற சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும், நேரத்துடன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இம்முறை திருவிழா திருப்பலியை தலைமை தாங்கி நடாத்த திருத்தந்தையின் பிரதிநிதி பேரயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை அவர்களை அழைத்துள்ளோம்.
இம்முறை தமிழ், சிங்களம், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
எனவே மடு திருவிழாவை ஒரு பொழுது போக்காக கருதாமல், ஆன்மீக ரீதியில் பக்தியுடன் பங்கெடுக்க வேண்டும்.உங்களுடைய ஒத்துழைப்பு எங்களுக்கு மிக மிக அவசியம். என அவர் மேலும் தெரிவித்தார்.

