போதைப்பொருளை கட்டுப்படுத்த பொறுப்பான நிறுவனங்களை பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அழைக்க தீர்மானம்

144 0

போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான முதற்கட்டமாக அது தொடர்பான நாட்டின் தற்போதைய நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியமானது என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடி, ‘நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்’ தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர்  டிரான் அலஸ் தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, இலங்கை பொலிஸ், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான அதிகார சபை ஆகிய நிறுவனங்களை குழு முன்னிலையில் அழைத்து இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தற்போதைய நிலைமையை கண்டறிவது அவசியமானது என குழுவின் தலைவர் அமைச்சர்  டிரான் அலஸ் தெரிவித்தார். அதற்கமைய, அந்த நிறுவனங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான மூலோபாயத் திட்டம் மற்றும் அது தொடர்பில் செயற்படும் நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.