இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் முட்டை 40ரூபாவுக்கு இன்று முதல் பல்பொருள் வர்த்தக நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் நுகர்வோருக்கு கிடைக்கிறது என அரச வணிக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சாதாரண மக்கள் கொள்வனவு செய்துகொள்ள எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை இன்றுமுதல் பல்பொருள் சந்தை விற்பனை நிலையங்களில் இருந்து 40ரூபா என்ற அடிப்படையில் நுகர்வோருக்கு பெற்றுக்கொ்ளள முடியும்.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டை ஒன்றை 35ரூபா என்ற அடிப்படையில் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுகிறது. பொதியிடப்பட்ட முட்டை பல்பொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது கொழும்பு, களுத்துறை கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை சதொச மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த வாரம் ஆரம்பத்தில் இருந்து குருணாகலை. புத்தளம் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களுக்கும் முட்டை விநியோகம் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் தற்போது 10இலட்சம் முட்டை விநியோகிப்பதற்காக கையிருப்பில் காணப்படுகிறது. தற்போது கையிருப்பில் இருக்கும் முட்டை குறைவடையும் அளவுக்கமைய நாளாந்தம் முட்டை கிடைக்கப்பெறுகிறது.
சந்தைகளில் நுகர்வோருக்கு முட்டை தட்டுப்பாடாகி வருவதாக கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளுக்கமைய, பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றார்.
நாட்டில் அண்மைக்காலமாக முட்டை தட்டுப்பாடு தொடர்பாகவும் அதன் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் முட்டை கொள்வனவு செய்யும் நோக்கில் முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் கட்டுப்பாட்டு விலையையும் பார்க்க அதிக விலைக்கு சில வர்த்தகர்கள் முட்டை விற்பனை செய்துவந்த நிலையில் இதனை தடுப்பதற்கும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கும் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
அதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டை பேக்கரி உற்பத்திகளுக்காக மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்றாலும் சந்தையில் தொடர்ந்தும் முட்டை விலை 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கிவிட்டு, தற்போது இறக்குமதி செய்யப்படும் முட்டை 40 ரூபாவுக்கு சாதாரண மக்களுக்கும் பெற்றுக்கொள்ள முடியுமான வகையில் சதொச மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய இன்றுமுதல் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

