வனவளத்திணைக்களம் கையகப்படுத்திவைத்துள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தியும், காணிகளுக்குரிய குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறும் கோரி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலிப் பகுதியில் கடந்த (24) திங்கள் அன்று நால்வர் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் குறித்த உணவுத்தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு நேற்று (25) வருகைதந்து, உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அந்தவகையில் வனவளத் திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளை விடுவித்து, விரைவில் காணி அற்ற மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த கலந்துரையாடலின்போது, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவிற்கு வந்திருந்தது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பைச்சார்ந்த 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபின்னர்,இந்தப் பகுதியைச் சேர்ந்த பலர் யுத்தத்தின்போது உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியேறியுமிருந்ததால், குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் அங்கு மீள்குடியேற்றுவதற்கு வருகைதரவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ஆம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது, குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக எல்லைப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான சூழலில் குறித்த வனவளத் திணைக்களம் எல்லைப்படுத்திய பகுதியில், காணி மற்றும், வீடுகளற்ற சுமார் இருபது குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்துவந்தனர். அந்தவகையில் குறித்த பகுதிக்குள் சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுமுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் குறித்த பகுதிக்குச் சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொழுத்துவதற்காக மண்ணெண்ணையுடன் வருகை தந்ததாகவும், பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களுக்குள் சென்றதாகவும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு போராளியான பெண் ஒருவர் மீதும், ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் அப்பகுதிமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் தமக்குரிய குறித்த காணிகளில் இருபது குடும்பங்களையும் விரைவில் குடியேற்றுமாறு கோரிக்கை முன்வைத்து ரவிச்சந்திரன் உதயச்சந்திரன், யோகேஸ்வரன் மயூரன், கணபதி கதிர்க்கீரன், கோவிந்தன் பிரசாந்தன் ஆகிய நால்வர் உணவுத்தவிர்ப்புப் போராட்டடத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந் நிலையில் குறித்த உணவுத்தவிர்ப்பு போராட்ட இடத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளரும் கடந்த (24) அன்று வருகைதந்து போராட்டக் காரர்களின் நிலைப்பாடு தொடர்பில் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் குறித்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதுடன், வனவளத் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தேராவில் வன ஒதுக்கத்துக்குள் உள்ளங்கவில்லை என்பதையும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதேவேளை வனவளத் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள குறித்த காணிக்குள் 08நிரந்தரக் கட்டுக்கிணறுகள் காணப்படுவதையும், சேதமடைந்த நிலையில் கட்டடங்கள் காணப்படுவதையும் குறித்த கடிதத்தின் மூலம் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் முல்லைத்தீவு மாவட்ட செயலரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
மேலும் குறித்த பகுதியில் இடப்பெயர்விற்கு முன்னர் மக்கள் வசித்துவந்துள்ளமை மற்றும், 14 காணி அற்ற குடும்பங்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வாறான சூழலில் குறித்த இடத்திற்கு (25) நேற்று வருகைதந்திருந்த மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், விரைவில் காணிகள் அற்ற மக்களிடம் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந் நிலையில்மக்களால் முன்னெடுக்கப்பட்ட உணவுத்தவிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

