போக்குவரத்து சட்டத்தில் விரைவில் திருத்தம்

146 0

போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு விரைவில் புதிய போக்குவரத்து சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய அடையாளங்காணப்பட்ட 32 போக்குவரத்து குற்றங்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை  (25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தற்போது பதிவாகும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய சாரதிகளால் மேற்கொள்ளப்படும் 32 வகையான குற்றங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இந்தக் குற்றங்களைப் புரியும் சாரதிகளுக்கு எதிராக ஜனவரி 1முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சமிஞ்ஞைகளை முறையாகப் பின்பற்றுதல் , உரிய வேகத்தில் பயணித்தல் , செல்லுபடியாகும் காப்புறுதி , விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாமல் செல்லல் உள்ளிட்ட பல குற்றங்கள் இவற்றில் உள்ளடங்கும். இவை தவிர ஜனவரி முதல் இலத்திரனியல் போக்குவரத்து முறைமையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக எதிர்வரும் தினங்களில் விலைமனு கோரப்படவுள்ளது. விலைமனு கோரலின் பின்னர் முன்வரும் முதலீட்டாளர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும்.

போக்குவரத்து சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் பொலிஸ் திணைக்களம் , மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் என்பவற்றினால் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.