பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 110 நாட்கள் பாதயாத்திரை நடத்த உள்ளார். இந்த பாத யாத்திரை வரும் 28-ம் தேதிராமேசுவரத்தில் தொடங்குகிறது. தொடக்க நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நிறைவு விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்கின்றனர்.
பாதயாத்திரை தொடக்க நிகழ்வுக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசிய அண்ணாமலை, நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

