சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்காக ஆற்றில் மிதக்கும் தடுப்புகளையும் முட்கம்பி வேலியையும் பொருத்தியமை தொடர்பாக, அமெரிக்க சமஷ்டி அரசாங்கம், அந்நாட்டின் டெக்ஸாஸ் மாநில அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்துக்கும் இடையிலுள்ள றியோ கிராண்டே ஆற்றின் குறுக்காக சுமார் 1,000 அடி (305 மீற்றர்) நீளத்துக்கு மிதவைகளை டெக்ஸாஸ் மாநில அரசாங்கம் பொருத்தியுள்ளது. அத்துடன் ஆற்றின் ஓரத்தில் முட்கம்பி வேலியையும் பொருத்தியுள்ளது.
இந்த மிதவைகள் ஆற்றின் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், மனிதாபிமான கரிசனைகளையும் ஏற்படுத்துகிறது என அமெரிக்க சமஷ்டி அரசின் உதவி சட்ட மா அதிபர் வனிதா குப்தா தெரிவித்துள்ளார்.
ஆனால், டெக்ஸாஸ் மாநில ஆளுநரான குடியரசுக்கட்சியைச் சேர்ந்த கிறேக் அபோட், இம்மிதவையை நீக்க மறுத்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆளுநர் அபோட் எழுதிய கடிதத்தில், மெக்ஸிக்கோவிலிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளைத் தடுப்பதற்கான பொறுப்புகளை ஜோ பைடன் நிறைவேற்றவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். டெக்ஸாஸ் மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கான அதிகாரம் தனக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலுள்ள நீதிமன்றத்தில் அமெரிக்க மத்திய அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
மேற்படி மிதவைகள் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்துள்ள அமெரிக்க நீதித்துறை திணைக்களம், அவற்றை அகற்றுவதற்கு டெக்ஸாஸ் ஆளுநர் அபோட்டுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.

