சுகாதார துறையில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அடிக்கடி அமைச்சரை மாற்றுவார்கள். அமைச்சர் மீதும் குற்றம் சுமத்துவார்கள். ஆனால் பிரச்சினைகளும் அவ்வாறே காணப்படும்.
நாம் அமைச்சர் மீது குற்றம் சுமத்துவமே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வினை தேடுவதில்லை என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வழக்கொன்றுக்கு ஆஜராவதற்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த போது சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இது தொடர்பில் இதுவரையில் நாம் எந்தவொரு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார துறையில் இதனை விட மிகுந்த அவதானம் செலுத்தப்படவேண்டும் என நம்புகிறோம். இல்லையென்றால் அடிக்கடி அமைச்சரை மாற்றுவார்கள். அமைச்சர் மீதும் குற்றம் சுமத்துவார்கள். பிரச்சினைகளும் அவ்வாறே காணப்படும். நாம் அமைச்சர் மீது குற்றம் சுமத்துவமே தவிர பிரச்சினைகளுக்கான தீர்வினை தேடுவதில்லை.
தற்போது ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தரவுகள் அனைத்தும் அழிந்துள்ளன. இது தொடர்பிலான விசாரணைகள் இன்றளவிலும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. எனவே சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆழமாக விசாரித்து தீர்வு வழங்கப்பட வேண்டும். பிளாஸ்டர்களை ஒட்டுவதால் இந்த நாட்டு மக்களுக்கு நியாயம் வழங்கப்படாது. தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு துறைசார்ந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

