ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற சஜித்!

61 0
ஐக்கிய மக்கள் சக்திக்கு கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இது சர்வகட்சி மாநாடு என்று அறியக்கிடைப்பதாகவும், தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இடையே பொது நிகழ்ச்சி நிரல், வேலைத்திட்டம்,

கருத்து ஒற்றுமை,கூட்டுப் பொறுப்புடன் ஒரு கருத்துடன் செயற்படும் நிலைப்பாடுகள் இல்லை எனவும்,நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி ஒருவேளை இந்த கலந்துரையாடலுக்குச் சென்றாலும்,இந்த கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு  தெரிவித்தார்.

அரசாங்கப் பேச்சுவார்த்தை நேர்மையுடன் நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும், வெற்றிபெற வேண்டுமானால், பேச்சுவார்த்தைகள் தூய்மையான நோக்கத்துடன் நடக்க வேண்டும் என்றும்,

அது அரசியல் ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது என்றும், நாட்டு நலனுக்காக செய்யப்படும் பணியாக பேச்சுவார்த்தை அமையப்பெறுவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும் என்றும், இந்த கலந்துரையாடல்களுக்கு தாம் அழைக்கப்பட்ட போதிலும்,நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் குறித்து தமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும்,நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பக்கம் இருந்து எதிர்க்கட்சி இதில் கலந்து கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 134 உறுப்பினர்களுக்கும் இடையில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன என்றும்,கலந்துரையாடலுக்கு வருவதற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளை சமாளித்து ஒரு நிலைப்பட்ட கருத்தொற்றுமைக்கு வருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் நாடு பல மாற்றங்களில் இருந்து மீண்டு வர முயற்சிக்கும் இந்நேரத்திலும் போலி மருந்துகளை கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை அழிக்கும் சுகாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும்,

வங்குரோத்தான நாட்டில் கூட, சுகாதாரத் துறையில் இருந்தும் திருட்டு இடம் பெறுவதாகவும்,

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் கலந்துரையாடல்களுக்கு முன்னர் இந்த தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் நலம் பெறவே மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்றாலும் கடந்த காலங்களில் மருந்துகளால் பல உயிர்கள் பலியாகியுள்ளன என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சி தொடர்ச்சியாக மக்களை விழிப்புணர்வூட்டி வந்த போது எதிர்க்கட்சி மக்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக அரசாங்கம் கூறியதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.எதிர்க்கட்சி இவ் விடயத்தில் கவனம் செலுத்தியமையினால்,

சுகாதாரத்துறையில் திருட்டுகள் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி என்ற வகையில், திருட்டு இல்லாத நாட்டை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி விரும்புவதால்,

இவ் விடயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும்,

திருடப்பட்ட பணத்தை பாடசாலை கட்டமைக்குப் வழங்கினால், மருத்துவமனை கட்டமைப்புக்கு வழங்கினால் நல்ல சுகாதார வசதியை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.