பிள்ளைகளை தேடும் பல தாய்மார்களின் பயணம் இதுவரை நிறைவடையவில்லை என காணாமல் போனோர் அலுவலகத்தின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் ‘மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை (23) கொழும்பில் உள்ள கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
30 வருடகால யுத்தம் எந்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளது என்பது கேள்விக்குரியது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பல தாய்மார்களின் தேடல்கள் தீவிரமடைந்தன . வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் தாய்மாரின் தேடல்கள் இன்றும் தொடர்கிறன.
1983 ஆம் ஆண்டு இனகலவரம் பல சம்பவங்களை இன்றும் நினைவுப்படுத்தியுள்ளது. 40 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. வடக்கு மற்றும் தெற்கு மாகாண தாய்மாரின் தேடல்கள் நிறைவடையவில்லை.
பாரிய போராட்டத்துக்கு மத்தியில் சட்டத்தின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கபட்டது. பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சிறந்த முறையில் செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த முப்பதின் கீழ் இரண்டு பிரேரணை சிறந்தது.
நாட்டில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகியது.
நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதை விடுத்து போராட்டத்தின் ஊடாக தீர்வு காண முற்பட்டால் நாட்டுக்காக தமது பிள்ளைகளை தாரைவார்க்க எந்த தாயும் இங்கு தயார் இல்லை.
பிள்ளைகளை தேடும் பல தாய்மார்களின் பயணம் இதுவரை நிறைவடையவில்லை. ஆகவே முரண்பாடற்ற வகையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அத்தியாவசியமானது என்றார்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண வேண்டும். அதை விடுத்து போராட்டத்தின் ஊடாக தீர்வு காண முற்பட்டால் நாட்டுக்காக தமது பிள்ளைகளை தாரைவார்க்க எந்த தாயும் இங்கு தயார் இல்லை.