புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும்

171 0

புகையிரத சேவையை திணைக்களம் என்ற அடிப்படையில் வைத்துக் கொண்டு புகையிரத சேவையை நவீனமயப்படுத்த முடியாது. மாற்றம் வேண்டுமாயின் புகையிரத சேவையை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும்.

நட்டத்தில் இயங்கும் புகையிரத திணைக்களம் வெகுவிரைவில் அதிகார சபையாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வாய்மூல விடைக்கான வினாக்களின் போது எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் 168 பிரதான புகையிரத நிலையங்களும், 147 உப புகையிரத நிலையங்களும்,69 புகையிரதம் நிறுத்தும் நிலையங்களும் உள்ளன. புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்த  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கொம்பனிவீதி புகையிரத நிலையத்தை ஜோன் கீல்ஸ் நிறுவனம், களனி புகையிரதத்தை  பவ என்ற நிறுவனம், ராகமை, கண்டி, றம்புக்கனை, அநுராதபுரம், நாவலபிட்டி ஆகிய புகையிரத நிலையங்களை பய்னோ என்ற நிறுவனம், தெமட்டகொட புகையிரத நிலையத்தை தந்திரி என்ற நிறுவனம், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை இலங்கை வங்கி அபிவிருத்தி செய்கின்றன.

புகையிரத நிலையங்களின் சொத்து மற்றும் காணி தொடர்பில் மும்மொழிகளிலும்  பெறுமை விளம்பரத்தை கோரியிருந்தோம். இதற்கமைய பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் மற்றும் சொத்துக்கள் தொர்பில் ஆராய்ந்து அவற்றை பயனுடையதாக்குவதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை ஊடாக சிறந்த தீர்மானம் எடுக்கப்படும்.

புகையிரத நிலையங்களை அண்மித்துள்ள  இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்குட்பட்டு புகையிரத காணிகளில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புக்கள்,வரி சேகரித்தல் குறித்து கவனம் செலுத்தும் பொறுப்பை  புகையிரத நிலைய அதிபர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரி சேகரிப்பின் 15 சதவீதத்தை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியர்கள்  இலங்கைக்கும்,இந்தியாவுக்கும் ஒரே காலப்பகுதியில் தான் புகையிரத சேவையை அறிமுகப்படுத்தினார்கள்.

புகையிரத சேவையில் இந்தியா பன்மடங்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால் இலங்கை பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை காட்டிலும் பின்னடைந்து, புகையிரத திணைக்களம் நிதி நிலையில் நட்டமடைந்துள்ளது.

புகையிரத சேவையை திணைக்களம் என்ற அடிப்படையில் தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது.மாற்றம் தேவையாயின் புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். வெகுவிரைவில் புகையிரத சேவை அதிகார சபையாக மாற்றியமைக்கப்படும்.புகையிரத சேவைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் என்றார்.