கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 16 கட்சிகள் பங்கேற்றன. இன்றைய கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்தியாவில் ஜனநாயகம், மாநில சுயாட்சி, அரசியலமைப்பு சட்டம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. வருகிற 2024 தேர்தலை மையமாக வைத்து பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் போல் இந்திய அளவில் கூட்டணி அமைத்து வெற்றி பெற வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் மீதுள்ள வழக்குகளை அமலாக்கத்துறை கண்டுகொள்வதில்லை. அமலாக்கத்துறை சோதனை எதிர்பார்த்த ஒன்றுதான்.
பிரதமர் யாரையெல்லாம் ஊழல்வாதிகள் என்று கூறினாரோ அவர்களெல்லாம் இன்று அவருக்கு அருகில் அமர்ந்துள்ளனர். இன்னும் பல கொடுமைகள் நடக்கும், அதையும் சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

