சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கு தமிழ்ப் பற்றாளர் மதிப்பளிப்பு.-அனைத்துலகத் தொடர்பகம்.

1257 0

18.07.2023

சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கு
‘‘தமிழ்ப்பற்றாளர்” என மதிப்பளிப்பு.

யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் கொம்பூர்க் தமிழாலய நிர்வாகி சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள், 19.06.2023 அன்று சாவடைந்தார் என்ற செய்தி யேர்மனி வாழ்தமிழ் மக்களையும் புலம்பெயர் கல்விசார் குமுகாயத்தையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இவர், தமிழீழ விடுதலை மீதும் தாய்மொழி மீதும் கொண்ட பற்றினால், 1985ஆம் ஆண்டு கொம்éர்க் நகரத்தின் முதலாவது செயற்பாட்டாளராகத் தேசிய விடுதலைப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டவராவார். புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் போராட்டச்செயற்பாடுகள் தீவிரம் பெற்றிருந்த தொடக்க காலத்தில் ஒரு செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்து, பின்னர் 1991ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் யேர்மனி தமிழாலயங்களின் கல்விப்பணியோடு தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டவராவார்.

கொம்பூர்க் தமிழாலயத்தின் நிர்வாகப் பொறுப்பையேற்று நீண்டகாலம் பணியாற்றியதோடு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய காலமாகயிருந்த காரணத்தால், தன்னையும் ஓர் ஆசிரியராக இணைத்து, தாய்மொழியைப் பிள்ளைகளுக்குக் கற்பித்தார். அதனைத்தொடர்ந்து யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளராகப் பத்து ஆண்டுகளாகத் தன்னலம் பாராது தாய்மொழி வளர்ச்சிக்காக உழைத்தவராவார். அத்துடன் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் பாதுகாவலனாகவும் செயற்பட்டு, மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றியிருந்தவராவார்.

மேலும், தமிழ் மக்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அவலநிலையினை வெளிக்கொணரும்வகையில், இந்த அவலங்களை உள்ளடக்கிய ‘காட்சியும் கானமும்’ என்ற நிகழ்ச்சியினை மேடையேற்றித் தாயக நிலவரத்தினை உணர்வோடு வெளிப்படுத்தியவராவார். இவர், நீண்டகாலத் தமிழ்ப்பணி நிறைவிற்காக ”தமிழ் வாரிதி”, ‘தமிழ்மாணி” ஆகிய மதிப்பளிப்புகளைப் பெற்றதோடு, முப்பது ஆண்டுகாலத் தமிழ்மொழிப்பணியினைப் பாராட்டி, யேர்மனி தமிழ்க் கல்விக்கழகத்தின் உயர் விருதினையும் பெற்றவராவார். இவர், எழுபதாவது அகவை கடந்தும் இளமைத் துடிப்போடு அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்து, மொழி வளர்த்த சான்றோனாவார்.

புலம்பெயர்வாழ்விலுள்ள பல சவால்களுக்கு மத்தியிலும் தமிழீழத்தையும் தாய்மொழியையும் தன் நெஞ்சத்தில் சுமந்து, தமிழ்மொழிக்காக மிகவும் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வினை வாழ்ந்த இவரை நாம் இழந்து நிற்கின்றோம். இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், யேர்மனி தமிழாலய குமுகாயத்தினர் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் நீண்டகாலத் தாய்மொழிப்பணிக்காக அவரை ‘தமிழ்ப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.