எங்களிடம் போதிய அளவு க்ளஸ்டர் குண்டுகள் உள்ளன – புதின் எச்சரிக்கை

148 0

எங்களிடம் போதிய அளவு க்ளஸ்டர் குண்டுகள் (வெடிபொருட்கள்) உள்ளன” என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் புதின் நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “ரஷ்யாவில் க்ளஸ்டர் குண்டுகள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றன. உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளுக்கு எதிராக இதுபோன்ற வெடி மருந்துகளை உக்ரைனால் பயன்படுத்தப்பட்டால், அவற்றைப் பயன்படுத்த மாஸ்கோவுக்கு உரிமை உள்ளது” என்று அவர் பேசினார்

முன்னதாக, அமெரிக்காவிடமிருந்து க்ளஸ்டர் குண்டுகளை உக்ரைன் பெற்றுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையிலான குண்டுகள் தடை செய்யப்பட்டடுள்ளன. இந்த நிலையில், இம்மாதிரியான வெடிபொருளை உக்ரைன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வாரம் நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. 250 கிமீ (155 மைல்கள்) பயணிக்கக் கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் முடிவுச் செய்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கவும் நேட்டோ நாடுகள் ஒப்புக் கொண்டன.

நேட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “உக்ரைன் போரில் புதின் தோற்றுவிட்டார்” என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.