என் மகன் சாவில் மர்மம் உள்ளது: முத்துக்கிருஷ்ணன் பெற்றோர் பேட்டி

340 0

என் மகன் சாவில் மர்மம் உள்ளது, இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் கூறினர்.

சேலம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி அலமேலு. இவர்களது மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 30).

இவர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பில் நவீன வரலாறு படித்தார். நேற்று ஹோலி பண்டிகை விடுமுறை என்பதால் டெல்லி முனீர்காவில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்ற இவர் அங்கு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை குறித்து தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார் மாணவனின் பிணத்தை கைப்பற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாதிக்கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்பு அவர் தனது பேஸ்புக் பதிவில் சில தகவல்களை பதிவிட்டு இருந்தார்.

பல்கலைக்கழகத்தில் எம்.பில். – பி.எச்.டி சேர்க்கையில் சாதி சம உரிமை வழங்கப்படவில்லை. இதேபோல வாய்மொழி தேர்விலும் சம உரிமை வழங்கப்படவில்லை. எல்லாவற்றிலும் உரிமை மறுக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்ப்பு குரல்களை சமூக வலைத் தளங்களில் பதிவு செய்யவும் உரிமை மறுக்கப்படுகிறது.

குறைந்தபட்ச கல்வியை வழங்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தற்கொலை செய்த மாணவன் முத்துக்கிருஷ்ணன் ஏற்கனவே ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் எம்.பில் முடித்து உள்ளார். அப்போது அங்கு படித்த தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு பிறகு நடந்த போராட்டங்களில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் கலந்து கொண்டு உள்ளார். தற்போது டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் முத்துக்கிருஷ்ணனுக்கு சாதி கொடுமை நடந்து உள்ளது தெரிய வந்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளனர்.

இதுகுறித்து முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் கூறியதாவது:-

எங்களது மகன் சிறு வயது முதலே நன்றாக படிப்பான். எப்போதுமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவான். நகைகளை விற்று அவனை படிக்க வைத்தோம். தற்போது டெல்லியில் உள்ள ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்தான். அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. அவனது சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவனின் சகோதரியும் தனியார் பள்ளி ஆசிரியையுமான கலைவாணி கூறியதாவது:-

எனது சகோதரர் தற்கொலை செய்து இருக்க மாட்டார். அவரது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவனின் தாயார் அலமேலு கூறியதாவது:-

எனது மகன் என்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். தற்போது தேர்வு நடந்து கொண்டு இருப்பதாகவும் அது முடிந்தவுடன் ஒரு வாரத்தில் வீட்டுக்கு வருவ தாகவும் கூறினான். அவன் தற்கொலை செய்தான் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவனது சாவில் மர்மம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவனின் தந்தை ஜீவானந்தம் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். இன்று அல்லது நாளை மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் அவனது உடல் டெல்லியில் இருந்து சேலம் கொண்டு வரப்பட உள்ளது.