உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதல்படி பணியாற்றுவேன்: செந்தில் பாலாஜி

235 0

உயிர் உள்ளவரை சசிகலா, தினகரன் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என மூன்று பிரிவுகளாக பிரிந்துள்ளது. 3 தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் அவரது வீட்டில் தினமும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதுகிறது.இதற்கிடையே நேற்று காலை முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில்பாலாஜி ஓ.பி. எஸ். வீட்டிற்கு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகுதான் அத்தகவல் வதந்தி என்று தெரிந்தது.

இது பற்றி அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் செய்த செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக சில ஊடகங்களில் என்னை பற்றி தவறான செய்திகள் வருகிறது. நான் அ.தி.மு.க.வில் கிளை செயலாளர், மாவட்ட மாணவர் அணி செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாவட்ட செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளையும், ஒன்றிய கவுன்சிலர், எம். எல்.ஏ., அமைச்சர் என்று பல்வேறு பதவிகளையும் பெற்று பணியாற்றினேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் என் உயிர் உள்ளவரை கட்சி நிர்வாகிகள், சசிகலா, தினகரன் வழிகாட்டுதலில் பணியாற்றுவேன். ஊடகங்களில் வருபவை அனைத்தும் வதந்தியாகும் என்றார்.நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதையடுத்து முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாகவே இருந்து வருகிறார். சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வானதும் மந்திரி சபை மாற்றம் இருக்கும். அதில் செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சரவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் அப்போதும் இல்லை.

இது பற்றி அவரது ஆதரவாளர்கள் கூறும் போது, செந்தில்பாலாஜியின் திறமையை ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் நன்கு அறிவார்கள். அடுத்த மந்திரிசபை மாற்றத்தின் போது மீண்டும் அமைச்சராகி விடுவார் என்பதால் அவர் பெயரை கெடுக்கும்வகையில் வதந்தி பரப்பப்படுகிறது என்றனர்.