உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்; 19 ஆம் திகதி குழு நிலையில் திருத்தம் – சபாநாயகர்

191 0
உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஆகவே சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து பிற்போடுவதற்கான காரணத்தை நான் அறியவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் குறிப்பிட்டதை தொடர்ந்து சட்டமூலத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற சபை முதல்வர் இணக்கம் தெரிவித்தார்.

இதற்கமைய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது, திருத்தங்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் குழுநிலை வேளையின் போது மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் இறுதி பகுதியில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில்  முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது திருத்த யோசனையில் சட்ட வரைபின் 28 பக்கங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும் அதே போல் இரண்டாவது திருத்த யோசனையிலும் பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

ஆகவே எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது துறைசார் மேற்பார்வை குழுவின் யோசனைகளுடன் குழுநிலை வேளை திருத்தத்துடன்  சட்டமூலத்தை  நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.

சபை முதல்வரின் உரைக்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷமன் கிரியெல்ல உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விவாதித்து தற்போது வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.சட்டமூலத்தை நிறைவேற்றாமல் தொடர்ந்து இழுபறி நிலைக்கு அரசாங்கம் செல்கிறது.

ஆகவே வியாழக்கிழமை (06) உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்றி  அதன் பின்னர் திருத்தம் செய்யலாம் என வலியுறுத்தினார்.

இதன்போது உரையாற்றிய சபாநாயகர் சபை முதல்வர் முன்வைத்த யோசனைக்கு சபை இணக்கமா என்று வினவினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கபுடாவின் யோசனைக்கு அமைய நேற்று முன்தினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டது.தற்போது ஊழல் எதிர்ப்பு சட்டமூலமும்  கபுடாவின் யோசனைக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை ஒட்டுமொத்த மக்களும் அவதானித்துக் கொண்டுள்ளார்கள் என்றார்.

இதன்போது  எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதியமைச்சர் அமைதியாக உள்ளார்.ஆகவே திருத்தம் தொடர்பில் அவர் குறிப்பிட வேண்டும்.

இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.. சபை முதல்வர் முன்வைத்த யோசனைக்கு சபை இணக்கமா என வினவினார்.ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இணக்கம் என்றார்கள்.

இதன்போது எழுந்து  உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ  ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்காக கடந்த 10 மாத காலமாக பாடுப்பட்டுள்ளேன்.பல விடயங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.ஆகவே தொடர்ந்து சட்டமூலத்தை நிறைவேற்றாமல்  இருப்பதற்கான காரணத்தை நான் அறியவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நீதியமைச்சரின் கருத்து பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது.கபுடாவின் யோசனைகளா ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு தடையாக உள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (06)  நிறைவேற்றப்பட்டு அதன் திருத்தங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி குழுநிலையில் மேற்கொள்வோம் என்றார்.இதற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.