செபஸ்தியார் வீதியில் காணப்படும் பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலை!

153 0

கிளிநொச்சி ஏ-09 வீதி இரணைமடுச் சந்தியினையும் பாரதி புரத்தினையும் இணைக்கும் செபஸ்தியார் வீதியில் காணப்படும் பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரத்தை அண்மித்த அதிக சனத்தொகை கொண்ட பிரதேசங்களாக காணப்படும் பாரதிபுரம் கிழக்கு, பாரதிபுரம் வடக்கு, கிருஸ்ணபுரம், மலையாளபுரம் ஆகிய கிராமங்களையும் ஏ-09 வீதியையும் இணைக்கும் பிரதான வீதியாக செபஸ்தியார் வீதி காணப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீதியை தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதியை குறுக்கறுத்து செல்லும் கழிவு வாய்க்கால் ஒன்றுக்கு கரைச்சி பிரதேச சபையினால் பத்து இலட்சம் ரூபாய் செலவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பாலம் கடந்த இரண்டு வருடங்களுக்குள் உடைந்து சேதமடைந்துள்ளது.

இவ்வாறு குறித்த பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்களால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு ஆபத்தான நிலையில் காணப்படும் பாலத்தின் ஊடாக தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.