தமிழர் படையிலிருந்த பெண்கள் அணியினரின் வீரதீரம் கண்ட பின்னர்தான் ஸ்ரீலங்காவின் முப்படைகளிலும் பெண்களை இணைத்துக் கொண்டார்கள் – செல்வம் அடைக்கலநாதன்

568 0

தமிழர் படையிலிருந்த பெண்கள் அணியினரின் வீரதீரம் கண்ட பின்னர்தான் ஸ்ரீலங்காவின் முப்படைகளிலும் பெண்களை இணைத்துக் கொண்டார்கள்.

அந்தளவுக்கு எமது தமிழ் சமூகப் பெண்கள் வீரதீரம் மிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றியிருக்கின்றோம் என்பதையிட்டு பெருமை கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

செயற்பாட்டாளர்களான பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூரில் இடம்பெற்றபோது அவர் அதில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழர் உரிமை விடுதலைப் போராட்டத்திலே எங்களுடைய பெண்களின் வீரமும் தீரமும் நிறைந்த செயலைக் கண்டு மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசு மலைத்துப் போனது மட்டுமல்லாமல் தங்களது முப்படைகளிலும் பெண்களை உள்வாங்கிக் nhண்டது.

வரலாற்றிலே பெண் பிரதமரையும், பெண் ஜனாதிபதியையும் கொண்டு பெருமை சேர்த்த இலங்கை அதன் மறுபக்க வரலாற்றிலே தலைமைத்துவம் கொள்ளத் துடித்த தமிழ் சமூகப் பெண்களை அழித்த கறைபடிந்த அத்தியாயத்தையும் கொண்டிருக்கின்றது என்பது கசப்பான உண்மையாகும்.

நாங்கள் பெண்களை முன்னுதாரணமாகக் கொள்கின்றபோது போராட்டத்திலே தமிழர் உரிமைக்காக தன்னைத் தியாகம் செய்து உயிர் நீத்த மட்டக்களப்பைச் சேர்ந்த அன்னை பூபதி நினைவுக்கு வருவார். தமிழர்களுக்கு அவர் எப்போதும் நினைவுக்கு வரவும் வேண்டும்.

தேசியத் தலைவரின் விடுதலைப் புலிகள் போர் வீரர் அணியிலே பெண்கள் அணிதான் ஆண்களை விட வீரதீரச் செயல்களில் மிகைத்து நின்றது என்பது வரலாறு.

எத்தனையோ எதிரிப் படைத் தளங்களை எமது பெண் வீராங்கனைகள் நிர்மூலமாக்கி அங்கிருந்த எதிரிப் படை வீரர்களான ஆண்களை ஓட வைத்த வரலாறு எமது தமிழ்க்குலப் பெண்களைச் சாரும்.

இப்பொழுது பெண்கள் தமது விடுதலை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டிய தேவைப்பாடு உள்ளது. முதலில் தமது குடும்பத்தில் இவர்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதா?

ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் அனைத்திலும் பங்களிப்புச் செய்கின்றபோதுதான் ஒரு தேசம் முன்னேறும்.

அந்தக் காலத்தில் அடுப்பூதிய பெண்கள் இப்பொழுது காஸ் சிலிண்டர் பாவிக்கிறார்கள்.

இந்த நாட்டிலே இன்னமும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறுவதன் அர்த்தம் பெண்கள் இன்னமும் தலைகுனிந்து இருக்கிறார்கள் என்பதுதான்.

நாங்கள் வீரமறவர்கள், வீர மண்ணில் தவழ்ந்தவர்கள் என்று சிந்தித்து செயல்படுகின்றபோது பெண்களை நெருங்குகின்ற பயங்கரம் விலகிச் செல்லும்.
எங்களுடைய சிந்தனையிலே சிறுமையாக நினைத்தால் வன்முறைகள் பெண்களை நாடி வந்து வீட்டுக் கதவைத் தட்டும்.

தமிழ்த் தாய்மார் தங்களுடைய குழந்தைகளுக்கு உணவூட்டுவதோடு வீரத்தையும் ஊட்ட வேண்டும்.

பயந்தாங் கொள்ளியாக இராது உலகத்தை வீர தீரச் செயல்களோடு பின்னிப் பிணைத்து அகல விரித்துக் காட்ட வேண்டும்.

உலகின் வேறு நாடுகளில் பெண்கள் அதி உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

பெண்கள் சரியான வீரத்தோடு செயற்பட வேண்டும்.
நாங்கள் சாதாரண ஒரு சமூகமல்ல. இப்பொழுது வடக்கு கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உருவாவதற்குக் காரணம் காரணம் எங்களை அழித்தொழித்த ஸ்ரீலங்கா அரசுதான்.

போராட்டத்திலே அந்தஸ்தோடு இருந்த பெண்கள் இப்பொழது முன்னாள் போராளிகளாக மாறியிருக்கின்ற வேளையிலே அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட தயங்கும் நிலை கண்டு உள்ளம் வருந்த வேண்டியுள்ளது.
இப்பொழுது கலாச்சாரம் சீரழிந்து போய் விட்டது. மாணவர்கள் போதையிலே மயங்கி இருக்கின்றார்கள்.

பேராட்டக் குணம் இப்பொழுது நம்மிடையே மழுங்கிப் போயுள்ளது. நாங்கள் இப்போது பார்வையாளர்களாக மாறிவிட்டிருக்கின்றோம்.
ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த நமது இளையோர் காணாமல் போனோர் விடயத்திலும், கைதிகள் விடுதலையிலும், காணி மீட்பிலும் ஈடுபட்டு போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்று நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.

போராட்டம் எந்த சாராருடையதாக இருந்தாலும் நாங்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றவர்களாக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைக்கப்படாத எந்தத் தீர்வையும் நாம் ஏற்கப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.