அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும்- லக்ஸ்மன் யாப்பா(காணொளி)

350 0

அரசியல்வாதிகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்காமல் மக்களுக்காக செயற்பட முன்வர வேண்டும் என, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து, தமது இருப்பை தக்க வைப்பதற்காகவே சிலர் நாடாளுமன்றத்தில் செயற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர்,

–பிரதானமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் மக்கள் பிரதிநிதிக்காக அதிகளவு நிதியை அரசாங்கம் செலவிடுகின்றது.

அது நாட்டின் நிதி. ஆகவே நாடாளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை நாம் மக்களுக்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

வேறு விடயங்களுக்காக இந்த நேரத்தை செலவிடுவோமே ஆனால் அது நாட்டிற்கு இழைக்கும் குற்றமாகும். இன்று நாடாளுமன்றத்தில் அநேகமான சந்தர்ப்பங்களில் சிலர் பிரபலமடைவதற்கும் அரசாங்கத்தில் இல்லாமல் எதிர்கட்சியில் இருக்கும் போது சிலர் தமது இருப்பை தக்கவைப்பதற்கும் காலத்தை செலவிடுகின்றனர்.

அரசாங்கத்தின் குறைநிறைகள், மக்களுக்குள்ள குறைநிறைகளை வெளிகொண்டுவரும் வகையில் மக்களுக்காக குரல் எழுப்புவதே எதிர்கட்சியின் கடமையாகும். இன்று சிலர் நாடாளுமன்றத்தில் அவ்வாறு குரல்கொடுப்பதில்லை.

தமது இருப்பை தக்கவைக்கும் வகையிலேயே சிலர் செயற்படுகின்றனர். நாட்டின் நிதி அழிக்கப்படுவதால் இதுவொரு குற்றமாகும். நாள் கணக்கில், வாரக் கணக்கில் சில வேளைகளில் முழு நாளும் நாடாளுமன்றத்தை இரண்டு மணித்தியாலங்களில் ஒத்திவைக்கும் நிலைமையை ஏற்படுத்துகின்றனர். முழு நாளும் வீணாகின்றது.

பாரிய அளவில் உணவு தயாரிக்கப்படுகின்றது. அவை குப்பையில் எறியப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டிய செயற்பாடுகள் நடைபெறுவதில்லை.

இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பின்றி செயற்படும்போது நாடாளுமன்ற கட்டமைப்பு தொடர்பிலும் கரிசனைகள் ஏற்படலாம். ஆகவே மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் எமது இருப்புக்காக செயற்பாடாமல், மக்களின் இருப்புக்காக நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதே முக்கியமானதாகும் என்று தெரிவித்தார்.