தடுப்புக் கூண்டிலிருந்தவருக்கு ஹெரோயின், ஐஸ் வழங்க முற்பட்டவர் மடக்கிப் பிடிப்பு!

179 0

கெஸ்பேவ நீதிவான் நீதிமன்ற தடுப்புக் கூண்டில்  வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு போதைப்பொருள் அடங்கிய பார்சல் ஒன்றை வழங்க முயற்சித்த ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில்  கைது செய்யப்பட்டதாக கெஸ்பேவபொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரால் வழங்கப்படவிருந்த   சிறிய பார்சலை பொலிஸார் கைப்பற்றி சோதனையிட்ட போது, அதில் 10 கிராம் ஹெரோயின், ஒரு பக்கெற்  ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெஸ்பேவ நீதிமன்றத்தின் பதில் நீதிவான் மதிய உணவு இடைவேளைக்கு நடவடிக்கைகளை ஒத்திவைத்த நிலையில், கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீதிமன்ற தடுப்புக் கூண்டின் முன்னால் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்தபோதே சந்தேக நபர் தடுப்புக் கூண்டிலிருந்தவருக்கு பொதி ஒன்றைக் கொடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரைக் கைது செய்ய குறித்த  பொலிஸ் உத்தியோகத்தர்  சென்றபோது  அவர்  தப்பிச் செல்ல முற்பட்டபோது  மடக்கி பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவராவார்.