37 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட லஞ்ச வழக்கில் நவாஸ் ஷெரீப் விடுதலை

53 0

பனமாகேட் ஊழல் வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை அந்த நாட்டின் தேசிய பொறுப்புடமை கோர்ட்டு விசாரிக்க தொடங்கியது.

இதில் அல் ஆசியா ஆலை ஊழல் வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப் இப்போது வரை நாடு திரும்பவில்லை. ஆனாலும் அவர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடமை கோர்ட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

அந்த வகையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சம் வாங்கி கொண்டு அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசியல்வாதிகள் மீதான வாழ்நாள் தடையை நீக்கும் வகையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை சுட்டிக்காட்டி இந்த வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.