மன்னாரில் வடக்கு-தெற்கு பெண்கள் பாத யாத்திரை

297 0

சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்க பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில்,சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி வடக்கு – தெற்கு பெண்கள் இணைந்த பாத யாத்திரை இன்று காலை மன்னாரில் இடம் பெற்றது.

இனங்களுக்கிடையில் சமத்துவத்தின் மூலமாக சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டத்திற்காக பெண்கள் தொழிலாளர்களின் உரிமை மற்றும் கௌரவத்தை உறுதி செய்ய வழியுறுத்தும் வகையில் குறித்த பாதயாத்திரை இடம் பெற்றது.

குறித்த பாத யாத்திரையில் கலந்து கொள்ளுவதற்காக தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் வருகை தந்திருந்ததோடு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று காலை 10 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் ஆரம்பமான பெண்கள் பாத யாத்திரை பிரதான வீதியூடாக சென்று மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்தது.

இதன்போது பாத யாத்திரையில் கலந்து கொண்ட பெண்கள் பெண்களின் உரிமைகள், சம்த்துவம் போன்றவற்றை வழியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

மேலும் ஆண்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளத்தொகையையும் பார்க்க பெண்களுக்கு வழங்கப்படுகின்ற குறைந்த அளவிலான சம்பளத்தையும் அவர்கள் வண்மையாக கண்டித்துள்ளனர்.

மேலும் இடம்பெறவுள்ள உள்ளுராச்சி மன்ற தேர்தலின் போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 25 சத வீதமான ஒதுக்கீட்டில் பெண்கள் அனைவரும் ஒன்றினைந்து இன,மத,பேதமின்றி பெண்களுக்கு வாக்களித்து பெண்களுக்கு அரசியலிலும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் குறித்த பாதயாத்திரையூடாக பெண்கள் முன் வைத்தனர்.

குறித்த பாதயாத்திரையானது மன்னார் நகர சபை மண்டபத்தை சென்றடைந்த நிலையில் அங்கு பெண்கள் தின பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், உதவித்தேர்தல் ஆணையாளர் டெனிசியஸ் கனியூட் அரவிந்தராஜ், உதவி தொழில் ஆணையாளர் ஜெகதீஸ்வரன் நீல லோஜினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.